ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் - குஜராத் அணிகள் இன்று மோதல்
|ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணி இன்று குஜராத்துடன் மோதுகிறது.
ஐதராபாத்,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று (வியாழக்கிழமை) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 66-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன் ரைசர்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் சந்திக்கின்றன.
ஐதராபாத் அணி இதுவரை 12 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது எஞ்சிய 2 ஆட்டங்களில் ஒன்றில் வென்றால் கூட அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விடும்.
குஜராத் அணி 13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 7 தோல்வி, ஒரு முடிவில்லை என 11 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. அதேநேரத்தில் இனிமேல் இழக்க எதுவும் இல்லை என்பதால் தனது கடைசி லீக் ஆட்டத்தில் அச்சமின்றி ஆடி அதிர்ச்சி அளித்து புள்ளி பட்டியலில் முன்னேற்றம் கண்டு ஆறுதல் வெற்றியுடன் விடைபெற குஜராத் அணி முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் 3 ஆட்டங்களிலும், ஐதராபாத் ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ஐதராபாத்: அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், மயங்க் அகர்வால், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், மார்கோ யான்சென் அல்லது கிளென் பிலிப்ஸ், அப்துல் சமத், ஷபாஸ் அகமது, கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், நடராஜன்.
குஜராத்: சுப்மன் கில் (கேப்டன்), விருத்திமான் சஹா, சாய் சுதர்சன், ஷாருக் கான், டேவிட் மில்லர், விஜய் சங்கர், ராகுல் திவேதியா, ரஷித் கான், மொகித் ஷர்மா, நூர் அகமது, ஜோஷ் லிட்டில் அல்லது அஸ்மத்துல்லா ஒமர்ஜாய்.