< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத்-பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை
கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத்-பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை

தினத்தந்தி
|
9 April 2023 12:54 AM GMT

இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியுடன், பஞ்சாப் கிங்ஸ் அணி மோதுகிறது.

ஐதராபாத்,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அதன்படி இன்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியுடன், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி மோதுகிறது.

கடந்த 2 சீசன்களில் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்ட ஐதராபாத் அணி இந்த ஆண்டும் தள்ளாடி வருகிறது. அந்த அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் முறையே ராஜஸ்தான், லக்னோ அணிகளிடம் தோல்வியை சந்தித்தது. ஐதராபாத் அணி முதல் ஆட்டத்தில் 131 ரன்னும், அடுத்த ஆட்டத்தில் 121 ரன்னும் தான் எடுத்தது.

அந்த அணியின் பேட்டிங் கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது. பேட்ஸ்மேன்கள் அபிஷேக் ஷர்மா, மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி ஆகியோர் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த ஆட்டத்தில் அணிக்கு திரும்பிய கேப்டன் மார்க்ரம் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ரூ.13¼ கோடிக்கு வாங்கிய ஹாரி புரூக் சொதப்பி வருகிறார். அப்துல் சமத் மட்டுமே பேட்டிங்கில் மெச்சும் வகையில் செயல்படுகிறார். அந்த அணி தங்களது பேட்டிங் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டியது அவசியமானதாகும்.

ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணி தனது லீக் ஆட்டங்களில் கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகளை போட்டு தாக்கியது. அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பாராட்டும் வகையில் சிறப்பாக இருக்கிறது. இந்த ஆட்டத்தில் தங்களது வெற்றி உத்வேகத்தை தொடரும் வேட்கையுடன் பஞ்சாப் அணியும், சரிவில் இருந்து மீண்டு வரும் நோக்கத்துடன் ஐதராபாத் அணியும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்