ஐ.பி.எல். கிரிக்கெட்: குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதல்
|சொந்த மண்ணில் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட குஜராத் அணி தீவிரம் காட்டி வருகிறது.
அகமதாபாத்,
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அதன்படி, இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் களமிறங்குகின்றன.
நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ஆட்டங்களில் விளையாடி 4-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது. முந்தைய லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் வெறும் 135 ரன் எடுத்த போதிலும் அதை வைத்து எதிரணியை 128 ரன்னில் மடக்கி மிரட்டியது. பேட்டிங்கில் விருத்திமான் சஹா, சுப்மன் கில், கேப்டன் ஹர்திக் பாண்டயா, டேவிட் மில்லர், பந்து வீச்சில் ரஷித்கான், முகமது ஷமி, மொகித் ஷர்மா உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். பலம்வாய்ந்த அணியாக வலம் வரும் குஜராத் இந்த சீசனில் 2 தோல்வியையும் உள்ளூரில் தான் சந்தித்து இருக்கிறது. எனவே சொந்த மண்ணில் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட தீவிரம் காட்டுவார்கள்.
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 3 தோல்வி என்று 6 புள்ளிகளுடன் இருக்கிறது. அந்த அணியில் கேப்டன் ரோகித் சர்மா, கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா நல்ல நிலையில் உள்ளனர். மும்பையை பொறுத்தவரை பந்து வீச்சு தான் கொஞ்சம் பலவீனமாக தென்படுகிறது.
மூத்த சுழற்பந்து வீச்சாளர் பியுஷ் சாவ்லா (9 விக்கெட்) மட்டுமே தொடர்ந்து நேர்த்தியாக பந்து வீசுகிறார். காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இன்னும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பஞ்சாப்புக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் ஒரே ஓவரில் 31 ரன்களை வாரி வழங்கிய அர்ஜூன் தெண்டுல்கருக்கு இடம் கிடைப்பது கடினம் தான்.
மொத்தத்தில் குஜராத்தின் சவாலை முறியடிக்க வேண்டும் என்றால் மும்பை அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஒருசேர கைகொடுக்க வேண்டியது அவசியமாகும்.