< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல். கிரிக்கெட்: குஜராத்துக்கு அதிர்ச்சி அளித்து டெல்லி 3-வது வெற்றி
கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: குஜராத்துக்கு அதிர்ச்சி அளித்து டெல்லி 3-வது வெற்றி

தினத்தந்தி
|
3 May 2023 5:23 AM IST

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் குஜராத்துக்கு அதிர்ச்சி அளித்து டெல்லி 3-வது வெற்றியை பெற்றது.

ஆமதாபாத்,

மிரட்டிய ஷமி

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த 44-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது. டெல்லி அணியில் உடல்நலக்குறைவு காரணமாக ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் இடம் பெறவில்லை.

'டாஸ்' ஜெயித்த டெல்லி கேப்டன் வார்னர் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட் செய்த டெல்லி அணி, குஜராத் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் 'ஸ்விங்' தாக்குதலில் சீர்குலைந்தது. முதல் பந்திலேயே தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் (0), மில்லரிடம் பிடிபட்டார். மற்றொரு தொடக்க வீரரும், கேப்டனுமான வார்னர் (2 ரன்) ரன்-அவுட்டில் வீழ்ந்தார். தொடர்ந்து ரோசவ் (8 ரன்), மனிஷ் பாண்டே (1 ரன்), பிரியம் கார்க் (10 ரன்) வரிசையாக ஷமியின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவிடம் கேட்ச் ஆனார்கள். இதனால் 23 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து டெல்லி திண்டாடியது. இந்த சீசனில் 'பவர்-பிளே'வுக்குள் 5 விக்கெட்டுகளை தாரைவார்த்த அணி டெல்லி தான்.

131 ரன் இலக்கு

ஊசலாட்டத்துக்கு மத்தியில் 6-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த அக்ஷர் பட்டேலும், அமன்கானும் அணியை சரிவில் இருந்து மீட்டு, கவுரவமான நிலைக்கு கொண்டு சென்றனர். ஸ்கோர் 73-ஐ எட்டிய போது அக்ஷர் பட்டேல் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அணி மூன்று இலக்கத்தை எட்டுவதற்கு உதவிய அமன்கான், ஐ.பி.எல்.-ல் தனது முதலாவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அமன்கான் 51 ரன்களும் (44 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), அடுத்து வந்த ரிபல் பட்டேல் 23 ரன்களும் எடுத்தனர்.

20 ஓவர்களில் டெல்லி அணி 8 விக்கெட்டுக்கு 130 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. குஜராத் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 4 ஓவர்களில் 11 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளினார். இதையும் சேர்த்து நடப்பு தொடரில் ஷமியின் விக்கெட் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்தது. அதிக விக்கெட் வீழ்த்தியோரில் முதலிடத்தை பிடித்த ஷமி ஊதாநிற தொப்பியை வசப்படுத்தினார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா 2 விக்கெட் கைப்பற்றியதுடன், ஐ.பி.எல்.-ல் மொத்தத்தில் 100 விக்கெட் மைல்கல்லை (92 ஆட்டம்) கடந்தார்.

பின்னர் 131 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணியும் வேகப்பந்து வீச்சில் தடுமாற்றத்திற்குள்ளானது. விருத்திமான் சஹா (0), மாற்று ஆட்டக்காரர் சுப்மன் கில் (6 ரன்), விஜய் சங்கர் (6 ரன்), டேவிட் மில்லர் (0) ஆகியோர் அணி 32 ரன்னை எட்டுவதற்குள் (6.4 ஓவர்) வெளியேற்றப்பட்டனர்.

இதன் பின்னர் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும், அபினவ் மனோகரும் இணைந்து அணியை சிக்கலில் இருந்து காப்பாற்ற போராடினர். ரன்ரேட் மந்தமானதால் தேவை அதிகரித்து நெருக்கடி தொற்றியது. மனோகர் தனது பங்குக்கு 26 ரன்கள் எடுத்தார். அடுத்து ராகுல் திவேதியா வந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா அரைசதம் அடித்தார்.

டெல்லி வெற்றி

கடைசி 2 ஓவர்களில் குஜராத்தின் வெற்றிக்கு 33 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்டியா வீசினார். இதில் முதல் 3 பந்துகளில் 3 ரன் எடுத்த நிலையில் அடுத்த 3 பந்துகளில் திவேதியா பிரமாண்டமான சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களை பரவசப்படுத்தினார். ஆனால் அந்த ஹாட்ரிக் சிக்சருக்கு பலன் இல்லை.

இறுதி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவையாக இருந்தது. பரபரப்பான 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா வீசினார். துல்லியமாக பந்து வீசிய இஷாந்த் ஷர்மா, திவேதியாவின் (20 ரன், 7 பந்து, 3 சிக்சர்) விக்கெட்டை கபளீகரம் செய்ததுடன், 6 ரன் மட்டுமே வழங்கி தங்கள் அணிக்கு திரில்லிங்கான வெற்றியை தேடித்தந்தார்.

ஹர்திக் பாண்ட்யா (59 ரன், 53 பந்து, 7 பவுண்டரி) கடைசி வரை களத்தில் நின்றும் பிரயோஜனம் இல்லை. குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 125 ரன்னில் முடங்கியது. இதன் மூலம் டெல்லி அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்ததுடன், இந்த சீசனில் ஏற்கனவே அடைந்த தோல்விக்கும் சுடச்சுட பதிலடி கொடுத்தது.

டெல்லி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் கலீல் அகமது, இஷாந்த் ஷர்மா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 9-வது லீக்கில் ஆடிய குஜராத்துக்கு இது 3-வது தோல்வியாகும். டெல்லிக்கு 3-வது வெற்றியாக பதிவானது.

மேலும் செய்திகள்