ஐ.பி.எல் கிரிக்கெட்; டெல்லி கேப்பிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதல்
|டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கடைசி இரு ஆட்டங்களில் பெற்ற வெற்றியின் மூலம் பிளே-ஆப் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.
கொல்கத்தா,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் 47வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.
இந்த தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கடைசி இரு ஆட்டங்களில் பெற்ற வெற்றியின் மூலம் பிளே-ஆப் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. அந்த அணி இதுவரை 5 வெற்றி, 5 தோல்வி என்று 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அதேவேளையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
ஏற்கனவே இவ்விரு அணிகளும் சந்தித்த ஆட்டத்தில் கொல்கத்தா 272 ரன்கள் சேர்த்து அதன் மூலம் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.