ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து பேர்ஸ்டோ விலகல் - ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ சேர்ப்பு
|ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து பேர்ஸ்டோ விலகி உள்ளார்.
புதுடெல்லி,
16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளில் ஒன்றான பஞ்சாப் கிங்ஸ் அணி மொகாலியில் ஏப்ரல் 1-ந் தேதி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் தனது முதலாவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை சந்திக்கிறது.
இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த இங்கிலாந்து விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனுமான ஜானி பேர்ஸ்டோ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இடது கணுக்காலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து குணமடைந்து பயிற்சியை தொடங்கி இருந்தாலும் இன்னும் முழு உடல் தகுதியை எட்டவில்லை. இதனால் அவர் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகி இருக்கிறார்.
இதனை பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் நேற்று உறுதி செய்தது. அத்துடன் பேர்ஸ்டோவுக்கு பதிலாக சர்வதேச போட்டியில் ஆடாத ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஷார்ட் சேர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுழற்பந்து வீசும் 27 வயது ஆல்-ரவுண்டரான மேத்யூ ஷார்ட் சமீபத்தில் நடந்த பிக்பாஷ் லீக் போட்டியில் 458 ரன்கள் குவித்ததுடன் 11 விக்கெட்டும் வீழ்த்தி தொடர்நாயகன் விருது பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.