15 ஆண்டுகளை நிறைவு செய்த ஐபிஎல்...ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வழங்கிய விருதுகள்...யாருக்கு தெரியுமா?
|ஐபிஎல் தொடர் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
மும்பை,
உலகளவில் அதிக புகழ் கொண்ட விளையாட்டு தொடர்களில் ஐபிஎல்-க்கு முக்கிய இடம் உண்டு. கடந்த 2008ம் ஆண்டு முதன் முதலாவதாக பிசிசிஐ ஐபிஎல் எனப்படும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரை தொடங்கியது. அதன் பின்னர் அதைப்பார்த்து தற்போது உலகெங்கிலும் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த வருடம் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி வரும் மார்ச் 31ம் தேதி போட்டிகள் தொடங்கி மே 28ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமே பெற்றிருக்கிறது.
இந்நிலையில் இந்த 15 ஆண்டு கால சாதனையை கொண்டாட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், Incredible Premier League awards என்ற பெயரில் விருதுகளை வழங்கியுள்ளது. அதன்படி சிறந்த கேப்டன், பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர் உள்ளிட்ட விருதுகளை வழங்கியுள்ளது.
சிறந்த கேப்டன்:-
சிறந்த கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்பை அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தி உள்ளது. விருது குறித்து ரோகித் கூறும்போது, எனக்கு ஆதரவு அளித்த மற்றும் வாக்களித்த அனைவருக்கும் நன்றி. ரசிகர்கள் தான் இந்த அணியின் முதுகெலும்பாகவும், தூண்களாகவும் இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.
சென்னை அணியின் கேப்டன் தோனி சிறந்த கேப்டனாக தேர்வாகாதது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிறந்த பேட்ஸ்மேன்:-
சிறந்த பேட்ஸ்மேன் விருது தென் ஆப்பிரிக்காவின் அதிரடி ஆட்டக்காரர் மற்றும் மிஸ்டர் 360 டிகிரி என அழைக்கப்படும் பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன் டிவில்லியர்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு அடுத்த இடத்தில் சென்னை அணி பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சிறந்த பந்துவீச்சாளர்:-
சிறந்த பந்துவீச்சாளராக மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்பை அணியின் வெற்றிக்கு பல ஆட்டங்களில் மிக முக்கிய பங்காற்றியவர் என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளது.
தாக்கத்தை ஏற்படுத்திய வீரர்:-
இந்த விருது வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரரும் கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரருமான ஆண்ட்ரே ரசலுக்கு வழங்கப்பட்டுள்ளது. கொல்கத்தா அணிக்காக கடந்த சீசன்களில் ஏற்படுத்திய தாக்கத்திற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது பட்டியலில் ஷேன் வாட்சனை விட அதிக புள்ளிகளை பெற்றதால் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
ஒரு சீசனில் சிறந்த பேட்ஸ்மேன்:-
ஒரு சீசனில் சிறப்பாக செயல்பட்ட பேட்ஸ்மேனாக விராட் கோலி தேர்வாகியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் விராட் கோலி 973 ரன்களை விளாசினார். இதில் 4 சதங்களும் அடங்கும். அவர் அடித்த 973 ரன்களே தற்போது வரை ஒரு சீசனில் வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.
ஒரு சீசனில் சிறந்த பந்துவீச்சாளர்: -
இந்த விருது கொல்கத்தா அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் ஐபிஎல் அறிமுக சீசனில் 15 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரது சிறப்பான ஆட்டத்தால் கொல்கத்தா அணி தனது முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதனால் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.