ஐ.பி.எல்; சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதல்
|5 முறை சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
சென்னை,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் 49வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. 5 முறை சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளி பெற்றுள்ளது.
பஞ்சாப் கணிக்க முடியாத அணியாக விளங்குகிறது. அந்த அணி இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 6 தோல்வியுடன் 6 புள்ளி பெற்றுள்ளது. எஞ்சிய 5 ஆட்டங்களும் அந்த அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். ஒன்றில் தோற்றாலும் அந்த அணியின் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பு முடிந்து போகும்.
தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 5 ஆட்டங்களை தவற விட்ட கேப்டன் ஷிகர் தவான் இந்த ஆட்டத்துக்கு திரும்புவாரா? என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்று அந்த அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் லாங்வெல்ட் தெரிவித்தார். இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான் என்று தெரிகிறது.
தனது உத்வேகத்தை தொடர பஞ்சாப் அணியும், உள்ளூரில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சென்னை அணியும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.