ஐ.பி.எல்.: தகுதி சுற்றில் குஜராத்தை வீழ்த்தி 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை.!
|ஐ.பி.எல். கிரிக்கெட்டின் முதலாவது தகுதி சுற்றில் குஜராத்தை தோற்கடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
சென்னை,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறிய இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் கோதாவில் குதித்தன.
'டாஸ்' ஜெயித்த குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் சென்னையை பேட்டிங் செய்ய அழைத்தார். இதன்படி ருதுராஜ் கெய்க்வாட்டும், டிவான் கான்வேவும் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். இளம் வேகப்பந்து வீச்சாளர் தர்ஷன் நல்கண்டே வீசிய 2-வது ஓவரிலேயே ருதுராஜ் கேட்ச் ஆனார். அதிர்ஷ்டவசமாக நல்கண்டே கிரீசுக்கு வெளியே காலை வைத்து நோ-பாலாக வீசியது தெரியவந்ததால் ருதுராஜிக்கு மறுவாழ்வு கிடைத்தது. அதன் பிறகு வீசப்பட்ட 'பிரீஹிட்'டில் சிக்சர் விளாசி ரன்வேட்டைக்கு சுழி போட்டார். ருதுராஜ் ஓரளவு வேகம் காட்டினாலும், கான்வே வழக்கத்துக்கு மாறாக தடுமாறினார்.
குஜராத்தின் பவுலர்கள் சரியான அளவில் பந்தை 'பிட்ச்' செய்து இடைவிடாது நெருக்கடி கொடுத்தனர். அவர்களின் தாக்குதலை திறம்பட சமாளித்த ருதுராஜ் கெய்க்வாட் இந்த சீசனில் தனது 4-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். குஜராத்துக்கு எதிராக அவர் இதுவரை ஆடியுள்ள 4 ஆட்டங்களிலும் அரைசதம் அடித்திருப்பது நினைவு கூரத்தக்கது.
ருதுராஜ் 60 ரன்
சிறப்பான அடித்தளம் உருவாக்கிய இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் திரட்டி (10.3 ஓவர்) பிரிந்தனர். ருதுராஜ் 60 ரன்களில் (44 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) மொகித் ஷர்மா வீசிய பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். அடுத்து வந்த 'சூறாவளி பேட்ஸ்மேன்' ஷிவம் துபே (1 ரன்) நூர் அகமதுவின் சுழலில் கிளீன் போல்டானார். இதன் பிறகு ரன்ரேட் மந்தமானது. 10 முதல் 14-வது ஓவர் வரை பந்து எல்லைக்கோடு பக்கமே செல்லவில்லை.
3-வது விக்கெட்டுக்கு வந்த அஜிங்யா ரஹானே தனது பங்குக்கு 17 ரன்கள் எடுத்தார். அடுத்த ஓவரில் கான்வேவும் (40 ரன், 34 பந்து, 4 பவுண்டரி) வெளியேறினார். தொடர்ந்து அம்பத்தி ராயுடு 17 ரன்னிலும், கேப்டன் டோனி ஒரு ரன்னிலும் வீழ்ந்தனர். ரவீந்திர ஜடேஜா (22 ரன்), மொயீன் அலி (9 ரன், நாட்-அவுட்) சவாலான நிலையாக, ஸ்கோர் 170-ஐ கடக்க உதவினர்.
20 ஓவர் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்தது. குஜராத் தரப்பில் முகமது ஷமி, மொகித் ஷர்மா தலா 2 விக்கெட்டும், ரஷித்கான், நூர் அகமது, தர்ஷன் நல்கண்டே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
173 ரன் இலக்கு
பின்னர் 173 ரன்கள் இலக்கை நோக்கி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக விருத்திமான் சஹாவும், சுப்மன் கில்லும் இறங்கினர். சஹா (12 ரன்), வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரின் ஷாட்பிட்ச் பந்துக்கு இரையானார். அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (8 ரன்), ஷனகா (17 ரன்), டேவிட் மில்லர் (4 ரன்) வரிசையாக சுழலில் சிக்கினர்.
பனிப்பொழிவின் தாக்கம் இல்லாததால், அதை சாதகமாக பயன்படுத்தி சென்னை சுழற்பந்து வீச்சாளர்கள் அட்டகாசப்படுத்தினர். இன்னொரு பக்கம் நிலைத்து நின்று ஆடிய சுப்மன் கில் (42 ரன், 38 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) தீபக் சாஹர் வீசிய பவுன்சர் பந்தை விரட்டிய போது எல்லைக்கோடு அருகே பிடிபட்டார். அப்போது குஜராத் 5 விக்கெட்டுக்கு 88 ரன்களுடன் (13.1 ஓவர்) தள்ளாடியது. உத்வேகம் சென்னை பக்கம் திரும்பியது.
இதன் பின்னர் மாற்று வீரர் விஜய் சங்கர் (14 ரன்), ரஷித்கான் (30 ரன், 16 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) சிறிது நேரம் அச்சுறுத்தி அடங்கினர்.
10-வது முறையாக இறுதிப்போட்டியில் சென்னை
20 ஓவர்கள் முழுமையாக ஆடிய குஜராத் அணி 157 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. சென்னை தரப்பில் தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா, தீக்ஷனா, பதிரானா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதி சுற்றை எட்டுவது இது 10-வது முறையாகும். ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணி சென்னை தான். இறுதிப்போட்டி வருகிற 28-ந் தேதி ஆமதாபாத்தில் நடக்கிறது.
குஜராத்துக்கு இன்னொரு வாய்ப்பு
முதலாவது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்சிடம் குஜராத் டைட்டன்ஸ் அணி தோற்றாலும் அந்த அணிக்கு இன்னொரு வாய்ப்பு உண்டு. அதாவது குஜராத் அணி, வெளியேற்றுதல் சுற்றில் (லக்னோ-மும்பை) வெற்றி பெறும் அணியுடன் 2-வது தகுதி சுற்றில் வருகிற 26-ந்தேதி ஆமதாபாத்தில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
முதல் முறையாக...
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் குஜராத்தை சென்னை அணி வீழ்த்தியது இதுவே முதல் முறையாகும். கடந்த ஆண்டில் இரண்டு முறை குஜராத்திடம் தோல்வியை தழுவிய சென்னை அணி இந்த சீசனில் தொடக்க லீக்கில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்தது. இவற்றுக்கு எல்லாம் வட்டியும் முதலுமாக தகுதி சுற்றில் பதிலடி கொடுத் திருக்கிறது.