< Back
கிரிக்கெட்
ஐபிஎல்: குஜராத் அணியின் சவாலை சமாளிக்குமா லக்னோ...? - பாண்ட்யா சகோதரர்கள் இன்று மோதல்...!

Image Courtesy: AFP 

கிரிக்கெட்

ஐபிஎல்: குஜராத் அணியின் சவாலை சமாளிக்குமா லக்னோ...? - பாண்ட்யா சகோதரர்கள் இன்று மோதல்...!

தினத்தந்தி
|
7 May 2023 9:08 AM IST

ஐபிஎல் தொடரில் இன்றைய முதலாவது லீக் ஆட்டத்தில் குஜராத்-லக்னோ அணிகள் மோதுகின்றன.

ஆமதாபாத்,

நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி 10 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் வீறுநடை போடுகிறது. டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 131 ரன் இலக்கை எட்டிப்பிடிக்க முடியாமல் அதிர்ச்சி தோல்வி கண்ட குஜராத் அணி, அந்த தோல்வியை மறக்கும் வகையில் முந்தைய ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை துவம்சம் செய்த உத்வேகத்துடன் களம் காணுகிறது.

குஜராத் அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவாக உள்ளது. பேட்டிங்கில் சுப்மன் கில் (375 ரன்கள்), ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர், விருத்திமான் சஹா, டேவிட் மில்லரும், பந்து வீச்சில் முகமது ஷமி (18 விக்கெட்), ரஷித் கான் (18 விக்கெட்) நூர் முகமது, மொகித் ஷர்மாவும் கலக்கி வருகிறார்கள். ஏற்கனவே 7 ரன் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி இருப்பதால் இந்த ஆட்டத்திலும் குஜராத் அணியின் ஆதிக்கம் நீடிக்கவே அதிக வாய்ப்புள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 10 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 10 புள்ளிகள் பெற்று இருக்கிறது. அந்த அணியின் முந்தைய லீக் ஆட்டம் (சென்னைக்கு எதிராக) மழையால் பாதியில் கைவிடப்பட்டது. அதற்கு முன்பு பெங்களூருவிடம் வீழ்ந்தது. பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங்கின் போது பந்தை பிடிக்க முயன்ற போது வலது தொடையில் காயம் அடைந்த கேப்டன் லோகேஷ் ராகுலுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டி இருப்பதால் அவர் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி விட்டார். அவருக்கு பதிலாக குருணல் பாண்ட்யா கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

லோகேஷ் ராகுலுக்கு பதிலாக கருண் நாயர் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு அணியில் ஆட வாய்ப்பு கிடைப்பது கடினம் தான். லக்னோ அணியில் திறமையான வீரர்கள் பலர் அங்கம் வகித்தாலும் அந்த அணி நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக வெளிநாட்டு வீரர்கள் நல்ல பங்களிப்பை அளித்தாலும், இந்திய வீரர்கள் போதிய அளவில் கைகொடுக்காதது அந்த அணிக்கு ஒரு பின்னடைவாக உள்ளது.

குஜராத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க லக்னோ மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. ஐ.பி.எல். போட்டியில் சகோதரர்கள் (குருணல் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா) கேப்டனாக ஆடுவது இதுவே முதல்முறையாகும். இதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பும், ஆர்வமும் அதிகரித்துள்ளது.


மேலும் செய்திகள்