ஐ.பி.எல். ஏலம்; விலை போகாத முன்னணி வீரர்கள்....!
|ஐ.பி.எல்.வீரர்கள் ஏலம் துபாயில் நேற்று நடைபெற்றது.
துபாய்,
10 அணிகள் பங்கேற்கும் 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. இதையொட்டி 10 அணிகளிலும் கழற்றி விடப்பட்ட மற்றும் விலகிய வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை எடுப்பதற்கான ஏலம் துபாயில் நேற்று நடந்தது. வெளிநாட்டில் அரங்கேறிய முதல் ஐ.பி.எல். ஏலம் இதுதான். 10 அணிகளுக்கும் சேர்த்து அதிகபட்சமாக 30 வெளிநாட்டவர் உள்பட 77 இடங்களை நிரப்ப வேண்டி இருந்தது.
ஏலப்பட்டியலில் 119 வெளிநாட்டு வீரர்கள் உள்பட மொத்தம் 333 பேர் இடம் பிடித்திருந்தனர். ஏலத்தை மும்பையைச் சேர்ந்த மல்லிகா சாகர் நடத்தினார். அண்மையில் இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட்டில் கலக்கிய வீரர்களை வாங்குவதில்தான் அணிகள் ஆர்வம் காட்டின. அதேசமயம் விக்கெட் கீப்பர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களை பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை.
7½ மணி நேரம் நீடித்த விறுவிறுப்பான ஏலத்தில் 30 வெளிநாட்டவர் உள்பட 72 வீரர்கள் ஏலம் போனார்கள். அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வீரர்களான மிட்செல் ஸ்டார்க் ரூ. 24.75 கோடிக்கு கொல்கத்தா அணியாலும், கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஐதராபாத் அணியாலும் ஏலத்தில் வாங்கப்பட்டனர்.
ஆனால் இந்த ஏலத்தின்போது ஆச்சரியமளிக்கும் வகையில் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் சில முன்னணி வீரர்கள் விலை போகவில்லை. அதில் ஸ்டீவன் சுமித், ஹேசில்வுட், ஜோஷ் இங்லிஸ் (மூவரும் ஆஸ்திரேலியா), அடில் ரஷித், பில்சால்ட் (இங்கிலாந்து), குசல் மென்டிஸ் (இலங்கை), சோதி, ஜேம்ஸ் நீஷம் (நியூசிலாந்து), வான்டெர் டஸன், தப்ரைஸ் ஷம்சி (தென் ஆப்பிரிக்கா) உள்ளிட்டோர் ஏலம் போகாத வீரர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். ஏலத்தில் இவர்களின் பெயர் ஒலித்தபோது அணி நிர்வாகிகள் மவுனம் காத்தனர்.