ஐ.பி.எல். 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட்..? வெளியான தகவல்
|2025-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். மெகா ஏலம் இன்னும் 5 மாதங்களில் நடக்கவுள்ளது.
புதுடெல்லி,
2025-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். மெகா ஏலம் இன்னும் 5 மாதங்களில் நடக்கவுள்ளது. இதனால் ஐ.பி.எல். நிர்வாகம் தரப்பில் உரிமையாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
இதனிடையே ஐ.பி.எல். தொடருக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை அந்த பதவியிலிருந்து நீக்கியது. 2018-ல் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற ரிக்கி பாண்டிங், கிட்டத்தட்ட 7 சீசன்களாக டெல்லி அணியை வழிநடத்தியும் ஒரு சாம்பியன் பட்டத்தைக் கூட அவரால் வாங்கித் தர இயலவில்லை.
இந்த ஆண்டு நடந்த தொடரில் டெல்லி அணி ஆடிய 14 போட்டிகளில் ஏழு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அத்துடன் பிளேஆப் சுற்றுக்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், கடைசி மூன்று சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை. இதனையடுத்து, ரிக்கி பாண்டிங் விடைபெறுவதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்தது.
இந்த நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்டும் தற்போது அணியை விட்டு வெளியேற இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், இதுதொடர்பாக அணி நிர்வாகமோ அல்லது ரிஷப் பண்ட்டோ இதுவரை அதிகாரபூர்வ எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இருப்பினும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிலிருந்து விலகி ரிஷப் பண்ட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.