ஐ.பி.எல். 2025: மெகா ஏலம் குறித்து வெளியான புதிய தகவல்... ரசிகர்கள் மகிழ்ச்சி
|2025 ஐ.பி.எல்.தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது.
மும்பை,
அடுத்த ஆண்டு (2025) ஐ.பி.எல்.தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. இதனையொட்டி ஐ.பி.எல். நிர்வாகம் மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மும்பையில் சமீபத்தில் நிறைவடைந்தது.
இதில் அனைத்து ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் அணி உரிமையாளர்களுக்கு மத்தியில் காரசாரமான விவாதம் நடந்ததாக தெரிய வந்துள்ளது. அப்போது பெரும்பாலான அணிகள் 4க்கு பதிலாக 7 வீரர்களை தக்க வைக்க கோரிக்கை வைத்தன. அத்துடன் பெரும்பாலான அணிகள் மெகா ஏலத்திற்கு பதிலாக சிறிய ஏலம் நடத்துவதை விரும்புவதாக தெரிய வந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் வெளிவந்துள்ள தகவலின் படி, ஐ.பி.எல். நிர்வாகம் ஒவ்வொரு அணியும் ஆறு வீரர்களை ஒரு அணி தக்க வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆறு வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதி அளித்து இருப்பதோடு ஏலத்தின்போது ஆர்டிஎம் கார்டு மூலம் வீரர்களை திரும்பவும் வாங்கி கொள்ளலாம் என்றும் ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சில ஐ.பி.எல். உரிமையாளர்கள் மெகா ஏலம் நடைபெறக் கூடாது என்று கூறப்பட்டு வரும் நிலையில் மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நிச்சயமாக நடைபெறும் என்று ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக ஒரு அணி 5 அல்லது 6 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதி அளித்தால் மட்டுமே தோனி அடுத்த ஆண்டு சென்னை அணிக்காக விளையாடுவார் என்று கூறப்பட்டது.
தற்போது வெளிவந்துள்ள இந்த தகவலால் சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.