< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல். 2024; உண்மையான ரிஷப் பண்ட்டை நாம் பார்க்க முடியாது - சுனில் கவாஸ்கர் விளக்கம்
கிரிக்கெட்

ஐ.பி.எல். 2024; உண்மையான ரிஷப் பண்ட்டை நாம் பார்க்க முடியாது - சுனில் கவாஸ்கர் விளக்கம்

தினத்தந்தி
|
19 March 2024 1:18 PM IST

2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது.

மும்பை,

2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி தற்போது குணமடைந்துள்ள ரிஷப் பண்ட் இந்த வருட ஐ.பி.எல் தொடரில் ஆட உள்ளார். அவர் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பிங் பணியை கவனிக்க மாட்டார்.

இந்நிலையில், முழங்காலில் மோசமான காயத்தை சந்தித்த ரிசப் பண்ட் அடிக்கடி அமர்ந்து எழுந்திருக்க வேண்டிய விக்கெட் கீப்பிங் வேலையை செய்வது கடினம் என்றும், அதனாலேயே இப்போதைக்கு பேட்டிங்கிலும் அதிரடியாக விளையாடக்கூடிய பழைய ரிஷப் பண்ட்டை நாம் பார்க்க முடியாது என இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

முழங்காலில் காயத்தை சந்திக்கும் போது விக்கெட் கீப்பிங் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். சொல்லப்போனால் பேட்டிங் செய்வதற்கும் கூட முழங்கால் என்பது முக்கியமாகும். எனவே ஆரம்பகட்டத்தில் நாம் இதற்கு முன் பார்த்த உண்மையான ரிஷப் பண்ட்டை பார்க்க முடியாது.

ஸ்டம்ப்புகளுக்கு பின்னால் நின்று ஜாலியாக பேசி பொழுதுபோக்கு செய்யும் அவரைப் போன்ற விக்கெட் கீப்பரை கண்டறிவது கடினமாகும். ஏனெனில் பேட்ஸ்மேன்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக பல்வேறு விஷயங்களை சொல்லக்கூடிய விக்கெட் கீப்பர்கள் இங்கே அதிகமாக உள்ளனர்.

ஆனால் அவர் யாரை நினைக்கிறாரோ அந்த பேட்ஸ்மேனை குறிவைத்து ஜாலியாக பேசும் திறமை ரிஷப் பண்ட்டிடம் மட்டுமே உள்ளது. அவருடைய பேச்சுக்களைக் கேட்டு எதிரணி பேட்ஸ்மேன்களும் சிரிப்பார்கள். ஆனால் அவருடைய பேச்சுக்களை அப்படி கேட்டு மகிழும் போது பேட்ஸ்மேன்களின் கவனம் சீர்குலைந்து விடும் அல்லவா..?. அது ரிஷப் பண்ட் விளையாடும் அணிக்கு பெரிய சாதகமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்