ஐ.பி.எல். 2024; இந்த தொடக்க ஜோடிதான் அதிக ரன்கள் குவித்து நம்பர் ஒன் ஜோடியாக இருக்கும் - ஆகாஷ் சோப்ரா
|ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது.
மும்பை,
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்ள உள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது.
சென்னையில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன. பொதுவாக ஐ.பி.எல் போன்ற டி20 தொடரில் வெற்றி பெறுவதற்கு தொடக்க வீரர்கள் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடியாக ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுப்பது அவசியமாகும்.
அந்த வகையில் இம்முறை நடப்புச் சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னைக்கு கடந்த வருடத்தைப் போலவே ருதுராஜ் கைக்வாட் – டேவோன் கான்வே ஆகியோர் நல்ல துவக்கத்தை கொடுப்பார்கள் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் இந்த வருட ஐ.பி.எல் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியில் உள்ள ஜெயிஸ்வால் – ஜோஸ் பட்லர் ஜோடிதான் அதிக ரன்கள் குவிக்கும் தொடக்க ஜோடியாக இருக்கும் என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் நல்ல தொடக்க ஜோடியாக இருப்பதாக நான் கருதுகிறேன். சொல்லப்போனால் அவர்கள் நம்பர் ஒன் ஜோடியாக இருப்பார்கள். ஜெய்ஸ்வாலின் தற்போதைய பார்ம் தான் அதை நான் சொல்வதற்கு முக்கிய காரணம். குறிப்பாக ஜெய்ஸ்வால் இந்த சீசனில் கிட்டத்தட்ட 600 ரன்கள் அடிப்பார்.
தற்போதுள்ள தன்னம்பிக்கையுடன் ஐ.பி.எல் தொடருக்கு செல்லும் போது கடந்த வருடத்தை விட இம்முறை அவர் வித்தியாசமான லெவலில் பேட்டிங் செய்வார். கடந்த வருடத்தை விட தற்போது அவரிடம் நிறைய முதிர்ச்சி இருக்கிறது. ஜோஸ் பட்லர் கடந்த வருடம் சுமாராக விளையாடினார். ஆனால் கடந்த எஸ்.ஏ.டி20 தொடரில் அவர் மீண்டும் சிறப்பாக செயல்பட்டார். அவரை உங்களால் எப்படி நீண்ட காலம் அமைதியாக வைத்திருக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.