ஐ.பி.எல் 2024; ஆர்.சி.பி அணியில் உள்ள ஒரே குறை இதுதான் - ஆகாஷ் சோப்ரா
|இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரின் முதலாவது ஆட்டத்தில் சென்னை - பெங்களூர் அணிகள் மோத உள்ளன.
பெங்களூரு,
ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இதன் முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. தற்போது அனைத்து அணிகளும் வீரர்களை ஒன்றினைத்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்த தொடர் விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில், அனைத்து அணிகளின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் . அந்த வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்.சி.பி.) அணி குறித்து ஆகாஷ் சோப்ரா, தனது கருத்தை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-' ஆர்.சி.பி. அணியில் உள்ள ஒரே குறை சுழற்பந்து வீச்சுதான். ஹசரங்கா மற்றும் ஷபாஸ் அகமதுவை அணியில் இருந்து விடுவித்த நிலையில் ஏலத்தின்போது தரமான சுழற்பந்து வீச்சாளர்களை ஆர்.சி.பி. அணி வாங்கவில்லை. பந்து வீச்சாளர்களை எண்ணத் தொடங்கும் போது, சுழற்பந்து வீச்சாளர்கள் எங்கே? என்ற கேள்வி எழுகிறது.
உங்களிடம் கர்ண் ஷர்மா இருக்கிறார், அவர் மிகச்சிறந்த பந்துவீச்சாளர். ஆனால் அவரைப் பயன்படுத்த நீங்கள் கொஞ்சம் தயங்குகிறீர்கள். நீங்கள் அவரை எல்லா இடங்களிலும் பந்துவீச அனுமதிக்க மாட்டீர்கள். சுழற்பந்து வீச்சாளர்களில், ஐதராபாத்தில் இருந்து மயங்க் தாகரை எடுத்துள்ளனர். மயங்க் தாகர் பரவாயில்லை. இருப்பினும் சேப்பாக்கம் மைதானம் சுழலுக்கு நன்கு ஒத்துழைக்கும். அதனால் சி.எஸ்.கே. அணியுடன் ஒப்பிடும்போது ஆர்.சி.பி.-யின் சுழல் தாக்குதல் வலுவிழந்த நிலையிலேயே உள்ளது' என்று கூறினார்.