ஐ.பி.எல். 2024; கேப்டனாக களமிறங்கும் ரிஷப் பண்ட்? - வெளியான தகவல்
|ரிஷப் பண்ட் வரும் ஐ.பி.எல் தொடரில் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுடெல்லி,
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். கடந்த 2022ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் ஓய்வில் உள்ளார்.
சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி எந்த ஒரு போட்டிகளிலும் பங்கேற்று விளையாடாமல் சிகிச்சை பெற்று வருகிறார். காயம் காரணமாக ஐ.பி.எல் 2023 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் என பெரிய தொடர்களை தவறவிட்ட ரிஷப் பண்ட் எப்பொழுது கம்பேக் கொடுப்பார்? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இதையடுத்து காயத்திலிருந்து மீண்டுள்ள ரிஷப் பண்ட் இந்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல். தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் பண்ட் சமீபத்தில் பெங்களூருவில் உள்ள ஆலூரில் ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடினார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் ரிஷப் பண்ட் வரும் ஐ.பி.எல் தொடரில் பேட்ஸ்மேனாக ஆடுவார் என்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வழிநடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விக்கெட் கீப்பிங் பணியை மற்றொரு வீரர் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.