ஐபிஎல் 2024; குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு புதிய கேப்டன்!
|குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யாவை ரூ.15 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.
மும்பை,
இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க ஐ.பி.எல். அமைப்பு கொடுத்திருந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.
இதனிடையே ஹர்திக் பாண்ட்யாவை மீண்டும் மும்பை அணி விலைக்கு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியது. மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்த ஹர்திக் பாண்ட்யா கடந்த 2022ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சென்றார். அவர் குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கபட்டார்.
இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.15 கோடிக்கு அதிகாரப்பூர்வமாக விலைக்கு வாங்கியுள்ளது. இதனை குஜராத் அணி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.
ஹர்திக் பாண்ட்யா விலகிய நிலையில், குஜராத் அணிக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையும் குஜராத் அணி தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.
மேலும் ஒரு முக்கிய பரிமாற்றமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீனை பெங்களூர் அணி விலைக்கு வாங்கியுள்ளது.