< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல். 2024: எதிரணிகளுக்கு ஆபத்தான பேட்ஸ்மேனாக கோலி இருப்பார் - இர்பான் பதான்
கிரிக்கெட்

ஐ.பி.எல். 2024: எதிரணிகளுக்கு ஆபத்தான பேட்ஸ்மேனாக கோலி இருப்பார் - இர்பான் பதான்

தினத்தந்தி
|
15 March 2024 9:00 PM IST

நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

பெங்களூரு,

ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இதன் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

ஐ.பி.எல் தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இம்முறையாவது முதல் கோப்பையை வெல்லுமா என்ற வழக்கமான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இம்முறையும் அந்த அணிக்கு பேட்டிங் துறையில் கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ், மேக்ஸ்வெல் ஆகியோருடன் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து வெற்றிக்காக போராட உள்ளார்.

குறிப்பாக 2023 உலகக்கோப்பையில் அபாரமாக விளையாடிய விராட் கோலி 765 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்து இந்தியா பைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதனால் தொடர் நாயகன் விருதையும் வென்ற அவர் தற்போது நல்ல பார்மில் இருப்பது பெங்களூரு அணிக்கு கூடுதல் பலத்தை சேர்க்கிறது. தற்போது நடைபெற்று முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சொந்த காரணங்களுக்காக விராட் கோலி விளையாடவில்லை. அதனால் சுமார் 2 மாதங்கள் முழுமையாக ஓய்வெடுத்த அவர் இந்த ஐ.பி.எல். தொடரில் புத்துணர்ச்சியுடன் களமிறங்க உள்ளார்.

இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடாமல் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் களமிறங்கும் விராட் கோலி ஐ.பி.எல். 2024 தொடரில் எதிரணிகளுக்கு ஆபத்தான பேட்ஸ்மேனாக இருப்பார் என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார். அதனால் 2016 சீசனில் அனல் பறக்க விளையாடி 973 ரன்கள் குவித்ததை போல இம்முறை விராட் கோலி எதிரணிகளை பந்தாடுவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு;-

"அனைத்தையும் விட முதலில் விராட் கோலி புத்துணர்ச்சியுடன் இருக்கிறார். விராட் கோலி போன்ற எப்போதும் ஃபிட்டாக இருக்கும் வீரர்கள் எதிரணிகளுக்கு ஆபத்தானவர்களாக இருப்பார்கள். அவர் இந்த ஐ.பி.எல். தொடரை விளையாடுவதற்கு எதிர்நோக்கியுள்ளார். இம்முறை விராட் கோலிக்கு 2016 சீசனுக்குப் பின் கெரியரின் இரண்டாவது சிறந்த ஐ.பி.எல். சீசன் அமையும் என்று நான் கருதுகிறேன்.

கடந்த 2 வருடங்களாக ரன்கள் அடித்தாலும் அவர் தன்னுடைய தரத்திற்கு நிகராக செயல்படவில்லை. ஆனால் இப்போது அவர் 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக எப்படி விளையாடினார் என்பதை நீங்கள் பார்க்கலாம். எனவே 2016இல் வெளிப்படுத்திய செயல்பாடுகளுக்கு நிகராக இம்முறை அவர் விளையாடுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த சீசனில் அவர் மகத்தான செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஆர்.சி.பி. அணிக்காக கோப்பையை வெல்வார் என்று கருதுகிறேன்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்