ஐபிஎல் 2024; மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு திரும்பும் கவுதம் கம்பீர்!
|கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி 2012 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
கொல்கத்தா,
இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 26-ந்தேதிக்குள் அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐ.பி.எல். அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் சீசனில் குஜராத்தை தோற்கடித்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது கோப்பையை வென்று அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பையின் சாதனையை சமன் செய்தது.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக லக்னோ அணியின் ஆலோசகராக பணியாற்றி வந்த கவுதம் கம்பீர் திடீரென்று அந்த அணியிலிருந்து விலகி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆலோசகராக இணைந்துள்ளார். இதனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
முன்னதாக அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டுள்ளார். அவரது தலைமையின் கீழ் கொல்கத்தா அணி 2012 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.