ஐ.பி.எல். 2024: கொல்கத்தா அணியில் மாற்றம்.. நம்பர் 2 டி20 பேட்ஸ்மேன் சேர்ப்பு.. காரணம் என்ன?
|இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரிலிருந்து கொல்கத்தா அணி வீரர் ஜேசன் ராய் விலகியுள்ளார்.
கொல்கத்தா,
இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.
இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த தொடரில் 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் ஆட்டத்தில் ஐதராபாத் அணியுடன் வரும் 23-ம் தேதி மோத உள்ளது. இந்நிலையில் இந்த வருட ஐ.பி.எல். தொடரில் இருந்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆன இங்கிலாந்தை சேர்ந்த ஜேசன் ராய் விலகியுள்ளார். அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதனையடுத்து கொல்கத்தா அணியில் ராய்க்கு பதிலாக மற்றொரு இங்கிலாந்து வீரரும் ஐ.சி.சி. டி20 தரவரிசையில் நம்பர் 2 டி20 பேட்ஸ்மேனுமான பில் சால்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.
பில் சால்ட் கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல். ஏலத்தில் விலை போகவில்லை. இந்நிலையில் இவரை ராய்க்கு பதிலாக அடிப்படை விலையான ரூ.1.5 கோடிக்கு கொல்கத்தா ஒப்பந்தம் செய்துள்ளது.