ஐ.பி.எல். 2024: சென்னை அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்..ரசிகர்கள் அதிர்ச்சி
|சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக இடம்பெற்றிருந்த நியூசிலாந்து முன்னணி வீரரான டேவான் கான்வே இந்த வருட ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளார்
சென்னை,
இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.
இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்நிலையில் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக இடம்பெற்றிருந்த நியூசிலாந்து முன்னணி வீரரான டேவான் கான்வே இந்த வருட ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளார். கால் விரலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளார். அறுவை சிகிச்சைக்கு பின், அவர் குணமடைய குறைந்தது 8 வாரங்கள் ஆகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் ஐ.பி.எல். மட்டுமின்றி மே மாதம் வரை எந்த வித போட்டிகளிலும் பங்கேற்காத சூழல் ஏற்பட்டுள்ளது.
இவரது விலகல் சென்னை அணிக்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவரது விலகலால் மற்றொரு நியூசிலாந்து வீரரான ரச்சின் ரவீந்திரா பிளேயிங் 11-ல் இடம்பெற வாய்ப்புள்ளது. இவர் ருதுராஜ் கெய்க்வாட்டுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.