ஐபிஎல் 2024; கேமரூன் கிரீனை இவ்வளவு பெரிய தொகைக்கு பெங்களூரு அணி வாங்கியது சரியான முடிவல்ல - ஆஸி.முன்னாள் வீரர்
|டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த ஆஸ்திரேலியா வீரர் கேமரூன் கிரீனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வாங்கியது.
சிட்னி,
இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க ஐ.பி.எல். அமைப்பு கொடுத்திருந்த காலக்கெடு கடந்த மாதம் 26ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்படி ஒவ்வொரு அணியும் விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை சமர்பித்தன.
இதனையடுத்து இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் சில முக்கிய வீரர்களை டிரேடிங் முறையில் வாங்கின. குறிப்பாக குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணியும் மும்பையில் இருந்த ஆஸ்திரேலியா வீரர் கேமரூன் கிரீனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் வாங்கின.
இந்நிலையில் ஹர்ஷல் படேல், ஹசரங்கா, ஹேசல்வுட் ஆகிய 3 முக்கிய பவுலர்களை விடுவித்ததால் பவுலிங் துறையில் மிகப்பெரிய வெற்றிடம் இருக்கும் நிலையில் கேமரூன் கிரீனை இவ்வளவு பெரிய தொகைக்கு பெங்களூரு வாங்கியது சரியான முடிவல்ல என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;-''கேமரூன் கிரீனை, பெங்களூரு அணி ஏலத்திற்கு செல்ல விடாமல் டிரேடிங் முறையில் வாங்கியுள்ளார்கள். குறிப்பாக ஏலத்தில் அவரை வாங்குவதற்கு இன்னும் சற்று அதிக தொகை தேவைப்படலாம் என்று பெங்களூரு நிர்வாகம் கருதுகிறது. இருப்பினும் அவர்களுடைய அணியின் வரிசையை பார்க்கும் போது கிரீனை வாங்கிய முடிவு சுமாரானது என்று நான் நினைக்கிறேன். மும்பை இந்தியன்ஸ் அணியில் பொருத்தமாக இருந்த அவர் பெங்களூரு அணியில் சரியானவராக தெரியவில்லை.
ஏனெனில் அவரை வாங்குவதற்கு பெரிய தொகை செலவழித்ததால் தரமான பவுலர்களை வாங்குவதற்கு தற்போது பெங்களூரு அணியிடம் நிறைய பணம் இல்லை. ஐபிஎல் தொடரை வெல்வதற்கு உங்களுக்கு குறைந்த இலக்கை கட்டுப்படுத்தக்கூடிய தரமான பவுலர்கள் தேவை. எனவே இது பெங்களூரு அணியின் தவறான முடிவு என்று கருதுகிறேன். அதே சமயம் கேமரூன் கிரீன் மற்ற அணியில் பொருத்தமானவராக இருந்திருப்பார்" என்று கூறினார்.