ஐ.பி.எல். 2024 ; நாளை வீரர்கள் ஏலம்..!
|2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
மும்பை,
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலம் நாளை துபாயில் நடைபெற உள்ளது. முதல்முறையாக ஐபிஎல் ஏலம் இந்தியாவில் இல்லாமல் வெளிநாட்டில் நடக்கவுள்ளது.
வீரர்களை வாங்க அதிகபட்சமாக குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.38 கோடியே 15 லட்சத்தை கையிருப்பாக வைத்துள்ளது. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சிடம் ரூ.31.4 கோடி இருப்புத்தொகை உள்ளது.
அதேபோல் குறைந்தபட்சமாக லக்னோ அணி கையிருப்பில் ரூ.13.15 கோடி உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் ஏலம் வரலாற்றில் முதல்முறையாக ஏலத்தை பெண் ஒருவர் நடத்தவுள்ளார். மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தை நடத்திய மல்லிகா சாகர் இதனை நடத்தவுள்ளார். நாளை இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு வீரர்களுக்கான மினி ஏலம் தொடங்கவுள்ளது. இந்த மினி ஏலத்தை கிரிக்கெட் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.
ஏலப்பட்டியலில் 214 இந்தியர்கள், 119 வெளிநாட்டவர் என்று மொத்தம் 333 வீரர்கள் இடம் பிடித்திருப்பதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது. இவர்களில் 116 வீரர்கள் சர்வதேச போட்டியில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். ஏலத்தில் 30 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 77 வீரர்கள் 10 அணிகளுக்காக எடுக்கப்பட உள்ளனர்.
இந்த ஏலத்தில் 3 இந்திய வீரர்கள் (ஹர்ஷல் பட்டேல், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ் ) உட்பட 23 வீரர்களின் அடிப்படை விலை அதிகபட்சம் ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதில் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சதம் விளாசிய டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் சுமித், பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), ஹாரி புரூக் (இங்கிலாந்து), ஜெரால்டு கோட்ஜீ (தென்ஆப்பிரிக்கா), முஜீப் ரகுமான் (ஆப்கானிஸ்தான்) உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.
மேலும், ஷாருக்கான், எம்.சித்தார்த், சந்தீப் வாரியர், ரித்திக் ஈஸ்வரன், பாபா அபராஜித், பிரதோஷ் பால், அஜிதேஷ், பாபா இந்திரஜித், குர்ஜப்னீத் சிங், ஜதாவேத் சுப்ரமணியன், சூர்யா ஆகிய 11 தமிழ்நாட்டு வீரர்களும் ஏலத்தில் இடம் பெற்றுள்ளனர். இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட அதிரடி ஆல்-ரவுண்டர் ஷாருக்கானின் அடிப்படை விலை ரூ.40 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தில் உலகக்கோப்பை தொடரில் அசத்திய வீரர்களான ரச்சின் ரவீந்திரா, ஜெரால்டு கோட்ஜீ, டிராவிஸ் ஹெட், ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோரை ஏலத்தில் எடுக்க கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.