ஐ.பி.எல்.2024; டெல்லி அணிக்கு மற்றொரு பின்னடைவு - முன்னணி வேகப்பந்து வீச்சாளர் விலகல்
|ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்கவுள்ளது.
புதுடெல்லி,
ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. இதையடுத்து இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை பி.சி.சி.ஐ சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து ஐ.பி.எல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் கடந்த ஐ.பி.எல். மினி ஏலத்தில் ரூ.4 கோடிக்கு வாங்கப்பட்ட இங்கிலாந்து இளம் வீரர் ஹாரி புரூக் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த சீசனில் இருந்து விலகுவதாக கடைசி நேரத்தில் அறிவித்தார். இவரது விலகல் டெல்லி அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்நிலையில் டெல்லி அணிக்கு மற்றொரு பின்னடைவாக அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த லுங்கி என்கிடி காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகி உள்ளதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், லுங்கி என்கிடிக்கு பதிலாக ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் ஜேக் ப்ரேசர்-மெக்குர்க்கை டெல்லி நிர்வாகம் மாற்று வீரராக அறிவித்துள்ளது. ஜேக் ப்ரேசர்-மெக்குர்க்கை அவரது அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு டெல்லி நிர்வாகம் சேர்த்துள்ளது.