ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக வார்னர் நியமனம்
|ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 31- ந் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் மாதம் நடந்த பயங்கர கார்விபத்தில் சிக்கியதால் ஏற்பட்ட முழங்கால் காயத்துக்கு ஆபரேஷன் செய்து காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதனால் அவரால் இந்த சீசனில் விளையாட முடியாது. எனவே இந்த ஆண்டுக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக இந்திய ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இயக்குனராக (கிரிக்கெட்) நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதனை டெல்லி அணி நிர்வாகம் நேற்று அறிவித்தது.
36 வயதான டேவிட் வார்னர் 2009 முதல் 2013-ம் ஆண்டு வரை டெல்லி அணிக்காகவும், 2014 முதல் 2021-ம் ஆண்டு வரை ஐதராபாத் அணிக்காகவும் ஆடினார். 2021-ம் ஆண்டில் அவரது ஆட்டம் மோசமாக இருந்ததால் ஐதராபாத் அணி கழற்றி விட்டதை அடுத்து கடந்த ஆண்டு டெல்லி அணிக்கு திரும்பினார். ஐ.பி.எல். போட்டியில் வார்னர் 162 ஆட்டங்களில் ஆடி 4 சதம், 55 அரைசதம் உள்பட 5,881 ரன்கள் குவித்துள்ளார்.