ஐபிஎல் 2023: காயம் காரணமாக விலகிய ஆர்ச்சர்...மாற்று வீரரை அறிவித்த மும்பை இந்தியன்ஸ்...!
|ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக விலகி உள்ளார்.
மும்பை,
ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இன்னும் 17 லீக் ஆட்டங்களே மீதம் உள்ளன. இதுவரை எந்த அணியும் பிளே ஆப் சுற்றை உறுதி செய்யவில்லை. புள்ளி பட்டியலில் குஜராத் (16 புள்ளி) முதல் இடத்திலும், சென்னை (13 புள்ளி) 2-ம் இடத்திலும், லக்னோ (11 புள்ளி) 3-ம் இடத்திலும் உள்ளன.
4 முதல் 8 இடங்களில் முறையே ராஜஸ்தான், கொல்கத்தா, பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகள் தலா 10 புள்ளிகளுடன் உள்ளன. புள்ளி பட்டியலில் 8ம் இடத்தில் உள்ள 5 முறை சாம்பியனான மும்பை அணி இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் உள்ளது.
அந்த அணியில் பந்துவீச்சில் பும்ரா சீசன் தொடங்குவதற்கு முன்னரே காயம் காரணமாக விலகினார். பும்ரா இல்லை என்றால் என்ன ஆர்ச்சரை வைத்து சமாளித்து விடலாம் என நினைத்து கொண்டிருந்த மும்பை அணிக்கு மற்றொரு அடியாக ஆர்ச்சரும் காயம் காரணமாக சில ஆட்டங்களில் ஆடாதது பெரும் பின்னடைவாக அமைந்தது.
இந்நிலையில், சில ஆட்டங்களில் ஆடிய ஆர்ச்சர் காயம் காரணமாக எஞ்சிய ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், ஆர்ச்சருக்கு பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டானை மும்பை அணி நிர்வாகம் அணியில் சேர்த்துள்ளது.