சர்வதேச டி20 லீக் தொடர்: கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற எம்.ஐ. எமிரேட்ஸ்
|இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக நிகோலஸ் பூரனும், தொடர் நாயகனாக சிக்கந்தர் ராசாவும் தேர்வு செய்யப்பட்டனர்.
துபாய்,
சர்வதேச டி20 லீக் கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்றது. இந்த தொடரில் பங்கேற்று விளையாடிய 6 அணிகளில் எம்.ஐ. எமிரேட்ஸ், கல்ப் ஜெயண்ட்ஸ், அபுதாபி நைட் ரைடர்ஸ், துபாய் கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன.
இதையடுத்து பிளே ஆப் சுற்று முடிவில் எம்.ஐ. எமிரேட்ஸ் அணியும், துபாய் கேப்பிடல்ஸ் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற துபாய் கேப்பிடல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் ஆடிய எம்.ஐ. எமிரேட்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவித்தது. நிகோலஸ் பூரன் 57 ரன்னும், பிளட்சர் 53 ரன்னும், முகமது வசீம் 43 ரன்னும், குசால் பெரேரா 38 ரன்னும் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய துபாய் கேப்பிடல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் நிகோலஸ் பூரன் தலைமையிலான எம்.ஐ. எமிரேட்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக நிகோலஸ் பூரனும், தொடர் நாயகனாக சிக்கந்தர் ராசாவும் தேர்வு செய்யப்பட்டனர்.