சர்வதேச டி20 கிரிக்கெட்: பாபர் அசாமின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா
|டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
கயானா,
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது.
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் 57 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து, இந்திய அணியின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 103 ரன்களில் சுருண்டது.
இதன் மூலம் இந்திய அணி 68 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாமின் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக வெற்றிகளை பதிவு செய்த வீரர் என்ற பட்டியலில் பாபர் அசாமை (48 வெற்றி) பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மா (49 வெற்றி) புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.