சர்வதேச டி20 கிரிக்கெட்; 27 பந்தில் சதம் அடித்து எஸ்தோனியா வீரர் உலக சாதனை
|எஸ்தோனியா - சைபிரஸ் அணிகள் இடையே 6 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
எபிஸ்கோபி,
எஸ்தோனியா - சைபிரஸ் அணிகள் இடையே 6 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி சைபிரஸ் நாட்டில் உள்ள எபிஸ்கோபியில் நேற்று நடந்தது.
இதில் முதலில் ஆடிய சைபிரஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய எஸ்தோனியா அணி 13 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் எஸ்தோனியா வீரர் சஹில் சவுகான் 41 பந்துகளில் 6 பவுண்டரி, 18 சிக்சருடன் 144 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
முன்னதாக அவர் 27 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையை சஹில் சவுகான் படைத்தார். இதற்கு முன்பு கடந்த பிப்ரவரியில் நடந்த நேபாளத்துக்கு எதிரான ஆட்டத்தில் நமிபியாவின் ஜேன் நிகோல் லோப்டி ஈடான் 33 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.