< Back
கிரிக்கெட்
சர்வதேச டி20 கிரிக்கெட்: கேப்டனான முதல் போட்டியிலேயே புதிய சாதனை படைத்த பும்ரா...!

Image Courtesy: @BCCI

கிரிக்கெட்

சர்வதேச டி20 கிரிக்கெட்: கேப்டனான முதல் போட்டியிலேயே புதிய சாதனை படைத்த பும்ரா...!

தினத்தந்தி
|
19 Aug 2023 11:12 AM IST

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனான முதல் போட்டியிலேயே பும்ரா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

டப்ளின்,

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்திய அணியில் பும்ரா இடம் பிடித்ததோடு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களே எடுத்தது.

இந்திய அணி தரப்பில் பும்ரா, பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 140 ரன் இலக்குடன் பேட்டிங் ஆடிய இந்திய அணி 6.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 47 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகன் (மேன் ஆப் தி மேட்ச்) விருது பும்ராவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது பெற்றதன் மூலம் பும்ரா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அறிமுகமான முதல் போட்டியிலேயே மேன் ஆப் தி மேட்ச் வாங்கிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன்களாக சேவாக், தோனி, ரெய்னா, ரகானே, கோலி, ரோகித், ஷிகர் தவான், ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், ஹர்த்திக் பாண்ட்யா ஆகிய 10 வீரர்கள் செயல்பட்டுள்ளனர். ஆனால் அவர்களில் ஒருவர் கூட கேப்டனாக செயல்பட்ட முதல் போட்டியில் மேன் ஆப் தி மேட்ச் விருது வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்