சர்வதேச டி20 கிரிக்கெட்; முதல் ஆஸ்திரேலிய வீரராக புதிய சாதனை படைத்த ஆடம் ஜாம்பா
|20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
ஆண்டிகுவா,
20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 24-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலிய அணி நமீபியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து நமீபியா முதலில் பேட்டிங் செய்தது.
ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சில் சுருண்ட நமீபியா, 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 72 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹெகார்ட் எராஸ்மஸ் 36 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 73 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 5.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
டிராவிஸ் ஹெட் 34 ரன்களுடனும், மிட்செல் மார்ஷ் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜாம்பா 4 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, ஆடம் ஜாம்பா 4 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவரது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 100 ஆக (83 ஆட்டம்) உயர்ந்தது.
சர்வதேச டி20 போட்டியில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை ஆடம் ஜாம்பா படைத்தார். உலக அரங்கில் இந்த சாதனை பட்டியலில் 15-வது வீரராக இணைந்தார்.