சர்வதேச டி20 கிரிக்கெட்; முதல் விக்கெட்டுக்கு 258 ரன்கள் - புதிய வரலாற்று சாதனை படைத்த ஜப்பான்
|நடப்பாண்டிற்கான கிழக்கு ஆசிய கோப்பைத் தொடர் (டி20 கிரிக்கெட்) ஹாங்காங்கில் உள்ள மோங் கோக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
மோங் கோக்,
உலகமெங்கும் கிரிக்கெட் போட்டிகளை வளர்ப்பதற்காக பல நாடுகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நடப்பாண்டிற்கான கிழக்கு ஆசிய கோப்பைத் தொடர் (டி20 கிரிக்கெட்) ஹாங்காங்கில் உள்ள மோங் கோக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 3வது லீக் போட்டியில் நேற்று சீனா - ஜப்பான் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் ஜப்பான் அணி பேட்டிங் ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லச்லன் லேக், கெண்டல் ப்ளெமிங் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே சீனாவின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.
அபாரமாக ஆடிய லச்சன் லேக்கும், கேப்டன் ப்ளெமிங்கும் சதம் விளாசி அசத்தினர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஜப்பான் அணி எந்த விக்கெட்டையும் இழக்காமல் 258 ரன்கள் விளாசியது. லச்சன் லேக் 134 ரன்களும், ப்ளெமிங் 109 ரன்களும் எடுத்தனர்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடக்க ஜோடி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு, அயர்லாந்து அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தானின் தொடக்க வீரர்கள் ஷாசாய் - உஸ்மான் கானி கடந்த 2019-ம் ஆண்டு 236 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை ஜப்பான் வீரர்கள் முறியடித்து புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளனர்.
259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பிரம்மாண்ட இலக்குடன் களமிறங்கிய சீனா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. வெறும் 16.5 ஓவர்களில் 78 ரன்களுக்கு சீனா ஆல் அவுட்டானது. இதன் மூலம் 180 ரன் வித்தியாசத்தில் ஜப்பான் அபார வெற்றி பெற்றது.
சர்வதேச டி20 வரலாற்றில் ஒரு விக்கெட்டிற்காக அதிக ரன்கள் எடுத்த பார்ட்னர்ஷிப் என்ற சாதனையை படைத்த ஜப்பான் அணிக்கு ரசிகர்கள் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.