வெற்றி கோப்பை அவமதிப்பு... மிட்செல்லின் செயலுக்கு நெட்டிசன்கள் கண்டனம்
|அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததும், அடுத்தடுத்து வைரலாக பல்வேறு தளங்களிலும் பரவியது.
புதுடெல்லி,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவது என முடிவு செய்தது. இதன்பின் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து 241 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடியது.
43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது. ஏற்கனவே 5 முறை உலக கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, தற்போது 6-வது முறையாக கோப்பையை வென்றுள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷ், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் செய்த செயல் வைரலாகி வருகிறது. அவர் இரண்டு கால்களையும் தூக்கி வெற்றி பெற்ற கோப்பையின் மீது வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளிவந்து வைரலானது.
இதனை முதலில், அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததும், அடுத்தடுத்து வைரலாக பல்வேறு தளங்களிலும் பரவியது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
அந்த புகைப்படத்தில், ஓட்டல் அறையில் மிட்செல் இருப்பது போன்று தெரிகிறது. அவர், கழுத்தில் தங்க பதக்கம் அணிந்து காட்சியளிக்கிறார். ஆஸ்திரேலிய அணியினர் ஒன்றாக அமர்ந்து, அவர்களுக்குள் பேசி கொண்டிருக்கின்றனர்.
இதற்கு சமூக ஊடக பயனாளர்களில் ஒருவர், அது உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான வெற்றி கோப்பை. அதற்கென்ற தனிமதிப்பை வழங்கவும் என தெரிவித்து உள்ளார். மற்றொருவர், உலக கோப்பையை வைத்திருப்பதற்கான தகுதி அவர்களுக்கு உள்ளது. ஆனால், இது மலிவான செயல் என தெரிவித்து உள்ளார்.
ஒருவர், உலக கோப்பையை கபில்தேவ் தலையின் மீது வைத்து இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும், மற்றொருவர் உலக கோப்பைக்கு சச்சின் தெண்டுல்கர் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு, இந்திய வீரர்கள் வெற்றி கோப்பைக்கு எப்படி மதிப்பளிக்கின்றனர் என எடுத்துக்காட்டியிருந்தனர்.
நெட்டிசன்களில் ஒருவர் கிண்டலாக, ஆஸ்திரேலியாவிடம் இருந்து 2043-ம் ஆண்டில், கோப்பையை வென்று பழி தீர்ப்போம் என்று தெரிவித்து உள்ளார்.