< Back
கிரிக்கெட்
பாண்ட்யாவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது - இந்திய முன்னாள் பயிற்சியாளர் விமர்சனம்

image courtesy: PTI

கிரிக்கெட்

பாண்ட்யாவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது - இந்திய முன்னாள் பயிற்சியாளர் விமர்சனம்

தினத்தந்தி
|
21 July 2024 12:37 PM GMT

இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி விரைவில் இலங்கைக்கு சென்று அந்த நாட்டு அணிக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. 20 ஓவர் ஆட்டங்கள் வருகிற 27, 28, 30-ம் தேதிகளில் பல்லகெலேவிலும், ஒரு நாள் போட்டிகள் ஆகஸ்டு 2, 4, 7-ம் தேதிகளில் கொழும்பிலும் நடைபெறுகிறது.

இலங்கை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான கமிட்டியினர், புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோரின் ஆலோசனைக்கு பிறகு அணி பட்டியல் இறுதி செய்து வெளியிடப்பட்டது.

உலகக்கோப்பையை வென்றதுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா விடைபெற்று விட்டதால் இந்திய 20 ஓவர் அணியின் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. உலகக்கோப்பையில் துணை கேப்டனாக பணியாற்றிய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பாண்ட்யாவுக்கு அடிக்கடி உடல்தகுதி பிரச்சினை ஏற்படுவதால் அவருக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமிப்பதே சரியாக இருக்கும் என்பது பயிற்சியாளர் கம்பீரின் விருப்பமாக இருந்தது. முடிவில் இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன்ஷிப் 33 வயதான சூர்யகுமார் யாதவிடம் வழங்கப்பட்டுள்ளது. துணை கேப்டன் பதவியும் பாண்ட்யாவிடம் இருந்து பறிக்கப்பட்டு இருக்கிறது. சுப்மன் கில் இனி துணை கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திடீரென யூடர்ன் போட்டுள்ள தேர்வுக்குழு துணை கேப்டன்ஷிப் பதவியை பறித்ததால் ஹர்திக் பாண்ட்யா மனமுடைந்திருப்பார் என்று இந்திய முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் விமர்சித்துள்ளார். இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"ஹர்திக் பாண்ட்யா டி20 கேப்டனாக நியமிக்கப்படாதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் ஒருவேளை 50 ஓவர் உலகக்கோப்பையில் காயத்தை சந்திக்காமல் போயிருந்தால் டி20 உலகக்கோப்பையில் ரோகித்துக்கு பதிலாக பாண்ட்யா கேப்டனாக செயல்படுவார் என்பது போல் தெரிந்தது. இந்திய அணியும் தேர்வுக்குழுவும் அந்தக் கோணத்தில்தான் சென்று கொண்டிருந்தன. ஆனால் திடீரென அவர்கள் இப்படி யூடர்ன் போட்டுள்ளது கொஞ்சம் பிரச்சினையை ஏற்படுத்துவதாக அமைகிறது. இது பற்றி ஹர்திக் பாண்டியாவிடம் தேர்வுக்குழுவினர் பேசி விட்டதாக செய்திகள் காணப்படுகின்றன.

மறுபுறம் சூர்யகுமார் உள்ளூர் கிரிக்கெட்டிலும் சர்வதேச கிரிக்கெட்டிலும் தேவையான அனுபவத்தை கொண்டுள்ளார். அவருக்கும் வீரர்களிடமிருந்து எப்படி சிறந்த செயல்பாடுகளை கொண்டு வருவது என்பது தெரியும். எனவே சூர்யகுமார் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் தவறில்லை. அவரால் இந்த வேலையை செய்ய முடியும் என்று நம்புகிறேன். ஆனால் இந்த முடிவு பாண்ட்யாவுக்கு அநீதியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. ஒரு வீரராக தேர்வாளர்களும் புதிய பயிற்சியாளரும் என்ன செய்ய முயற்சிக்கிறார்கள் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். தற்போது டி20 கேப்டன்ஷிப் விஷயத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவு கண்டிப்பாக ஹர்திக் பாண்ட்யாவுக்கு அநீதியை ஏற்படுத்தியுள்ளது. அது அவரை ஆழமாக காயப்படுத்தி இருக்கும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்