இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி விளையாடுவார் என தகவல்!
|இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மும்பை,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் கணுக்கால் காயம் காரணமாக உலகக்கோப்பை தொடருக்கு பின் எந்த வித போட்டிகளிலும் விளையாட இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இந்த தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி விளையாடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் ஒரு தனியார் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த முகமது ஷமி, ' காயத்திலிருந்து நல்ல முன்னேற்றம் அடைந்து மீண்டு வருகிறேன். கணுக்காலில் சிறிய வலி உள்ளது ஆனால் பரவாயில்லை. நான் எனது பயிற்சிகளை ஆரம்பித்துவிட்டேன். இங்கிலாந்து தொடரில் நான் மீண்டும் அணிக்கு திரும்ப முடியும் என்று நம்புகிறேன்' என கூறியுள்ளார்.
இதனால் அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் காயத்தன்மையை பொறுத்தே அணி நிர்வாகம் இதில் முடிவு எடுக்கும் என்பதால் ஷமி அணியில் இடம்பெறுவாரா இல்லையா என்பது பிறகுதான் தெரியவரும்.