< Back
கிரிக்கெட்
இந்தூர் டெஸ்ட்: முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 47 ரன்கள் முன்னிலை

image courtesy: BCCI twitter

கிரிக்கெட்

இந்தூர் டெஸ்ட்: முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 47 ரன்கள் முன்னிலை

தினத்தந்தி
|
1 March 2023 5:10 PM IST

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 54 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தூர்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் இந்தூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் களமிறங்கினர். ஆனால், ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரோகித் சர்மா 12 ரன்னிலும், சுப்மன் கில் 21 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய புஜாரா 1 ரன்னிலும், ஜடேஜா 4 ரன்னிலும், ஸ்ரேயாஸ் அய்யர் (0) ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். சற்று நிலைத்து நின்று ஆடிய விராட் கோலி 22 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த அஸ்வின் 3 ரன்னிலும், உமேஷ் யாதவ் 17 ரன்னிலும், முகமது சிராஜ் (0) ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

இறுதியில், 33.2 ஓவரில் 109 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் இந்தியா ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மேதிவ் குஹ்னிமென் 5 விக்கெட்டுகளையும், நாதன் லயன் 5 விக்கெட்டையும், மொர்பி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து ஆஸ்திரேலியா அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா அதிரடியாக விளையாடி 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னே 31 ரன்களிலும் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 26 ரன்களிலும் அவுட்டாகினர்.

இந்த நிலையில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 54 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து 47 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 7 ரன்களுடனும் கேமரூன் கிரீன் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

மேலும் செய்திகள்