< Back
கிரிக்கெட்
இந்தூர் டெஸ்ட்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
கிரிக்கெட்

இந்தூர் டெஸ்ட்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

தினத்தந்தி
|
3 March 2023 10:55 AM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்தூர்,

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. சுழலுக்கு சொர்க்கபுரியாக திகழும் இந்த ஆடுகளத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 109 ரன்னில் சுருண்டது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 76.3 ஓவர்களில் 197 ரன்னில் அடங்கியது. இதில் கடைசி 11 ரன்னுக்கு அந்த அணி 6 விக்கெட்டுகளை தாரைவார்த்தது. டெஸ்ட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவின் மோசமான பின்வரிசை சீர்குலைவுகளில் ஒன்றாக இது வர்ணிக்கப்படுகிறது. இந்திய தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அஸ்வின், உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா மீண்டும் சொதப்பியது. ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 60.3 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்து மொத்தம் 75 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 64 ரன் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை அள்ளினார்.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா 76 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. சிறிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா 3-வது நாளான இன்று களமிறங்கியது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா, அக்ஷர்பட்டேல் கூட்டணி ஏதாவது மாயாஜாலம் காட்டி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி முதல் ஓவரிலேயே கவாஜாவை அஸ்வின் அவுட்டாக்கினார். ஆனால், அடுத்து வந்த லபுஷேனும், ஹெட்டும் அபாரமாக விளையாடி ஆஸ்திரேலிய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் 1 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியில் மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடிக்கிறது.

மேலும் செய்திகள்