பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை விமர்சிக்கும் இந்திய நடுவர்... நடந்தது என்ன..?
|ரிஸ்வான் தேவையின்றி ஒவ்வொரு பந்திலும் அவுட் கேட்டதாக அனில் சவுத்ரி விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான். கடந்த 2015 முதல் சர்வதேச அரங்கில் விளையாடி வருகிறார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடும் அவர் பாகிஸ்தானுக்கு சில வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார்.
முன்னதாக களத்தில் முகமது ரிஸ்வான் செய்யக்கூடிய சில சேட்டையான வேலைகள் ரசிகர்களால் கிண்டல் அடிக்கப்பட்டன. குறிப்பாக கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இறங்கி சென்று அடிக்க முயற்சித்த அவர் கிளீன் போல்டானார். ஆனால் தம்முடைய சொதப்பலை மறைப்பதற்காக அடுத்த நொடியே அவர் காயமடைந்தது போல் தலையில் விழுந்தார். அப்போது காயத்தை சந்திக்காமலேயே அவர் வேண்டுமென்று நடிப்பதாக ரசிகர்கள் ஆதாரத்துடன் விமர்சித்தனர்.
அது பற்றி நேரடியாக கேட்டபோது 'சில நேரங்களில் அது காயம். சில நேரங்களில் நடிப்பு' என்று ரிஸ்வான் சிரித்துக் கொண்டே சொன்னதை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அதே போல பொதுவாக பேட்ஸ்மேன்கள் எல்பிடபிள்யூ அல்லது கேட்ச் கொடுப்பது போல் தெரிந்தால் உடனடியாக விக்கெட் கீப்பர்கள் நடுவர்களிடம் அவுட் கேட்பது வழக்கமாகும். ஆனால் முகமது ரிஸ்வான் மட்டும் பெரும்பாலும் பேட்ஸ்மேன்கள் மீது பந்து பட்டாலே உடனடியாக அம்பயர்களிடம் வேகமாக கத்தி நடுவர்களிடம் அவுட் கேட்பார்.
இந்நிலையில் கடந்த 2023 ஆசிய கோப்பையில் முகமது ரிஸ்வான் தேவையின்றி ஒவ்வொரு பந்திலும் சத்தமாக கத்தி அவுட் கேட்டதாக இந்தியாவைச் சேர்ந்த பிரபல நடுவர் அனில் சவுத்ரி விமர்சித்துள்ளார். குறிப்பாக வாயில் லிப்ஸ்டிக் அடித்துக்கொண்டு புறாவைப் போல் அடிக்கடி பறந்து ரிஸ்வான் அவுட் கேட்பார் என்றும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:-"ரிஸ்வான் அதிகமாக முறையிடுகிறார். அதனால் அவரிடம் விழிப்புடன் இருக்குமாறு என்னுடைய சக நடுவர்களிடம் கூறியுள்ளேன். அவர் ஒவ்வொரு பந்திலும் கத்திக் கொண்டே இருப்பார். அவர் லிப்ஸ்டிக் போன்றவற்றை போடுபவர் அல்லவா? அதைப் போட்டுக் கொண்டு அவர் புறா போல குதித்துக் கொண்டே இருப்பார்.
உண்மையில் ஒரு நல்ல நடுவருக்கு யார் நல்ல கீப்பர் என்பது தெரியும். ஒருவேளை நடுவர் நன்றானவராக இருந்தால் அவரைப் போன்ற கீப்பர்கள் தோற்றவர்கள். ஏனெனில் டெக்னாலஜி இந்தளவுக்கு வளர்ந்த பின்பும் ஏன் உங்களை நீங்களே மோசமாக்கி கொள்கிறீர்கள்? அது போன்றவற்றின் மீது ரசிகர்கள் கிண்டலை உருவாக்குவார்கள்" என்று கூறினார்.