< Back
கிரிக்கெட்
இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை மாற்ற கூடாது..காரணம் இதுதான் - முன்னாள் வீரர் கருத்து

image courtesy: PTI

கிரிக்கெட்

இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை மாற்ற கூடாது..காரணம் இதுதான் - முன்னாள் வீரர் கருத்து

தினத்தந்தி
|
17 Jun 2024 10:45 AM GMT

இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை எந்த வகையிலும் மாற்றக்கூடாது என்று முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

மும்பை,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைய உள்ளன. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேச அணிகளை சந்திக்க உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் பேட்டிங் கவலை அளிப்பதாக உள்ளது. லீக் சுற்றில் பந்துவீச்சுக்கு சாதகமாக நியூயார்க் பிட்ச்சில் மூன்று போட்டிகளில் ஆடிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க முடியாமல் திணறினர்.

ஆனால் இந்தியாவின் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் அனைத்தும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. அதனால் அங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் இந்திய அணியில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து இருந்தனர். ஆனால் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை எந்த வகையிலும் மாற்றக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், "விராட் கோலி தற்போது துவக்க வீரராக களம் இறங்கி விளையாடி வருகிறார். எனவே ரோகித் மற்றும் கோலி ஆகிய இருவரையும் பிரிக்கக் கூடாது. அப்படி செய்தால் சிறப்பாக பேட்டிங் செய்து வரும் ரிஷப் பண்ட் மூன்றாவது இடத்தில் இருந்து நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும் அல்லது அதற்கு கீழே அவர் பேட்டிங் செய்ய வேண்டும். சூர்யகுமார் யாதவ் நான்காம் வரிசையில்தான் பேட்டிங் ஆடுவார். எனவே, அது பேட்டிங் ஆர்டரில் குழப்பத்தை ஏற்படுத்தும்.

எனவே அந்த முடிவுகளை ரோகித் சர்மா எடுக்க வேண்டாம். அதை தவிர்த்து தங்களது ஆட்டத்தில் எவ்வாறு முன்னேற்றத்தை காணலாம் என்று அணி மீட்டிங்கின்போது பேசலாமே தவிர மாற்றத்தை ஏற்படுத்தக் கூடாது. தற்போது உள்ள இந்திய அணி நிச்சயம் எந்த ஒரு அணியையும் வீழ்த்தக்கூடியதாகவே இருக்கிறது. எனவே பயிற்சியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்