வங்காளதேசத்தை இந்திய அணி எளிதில் வீழ்த்தும் - தினேஷ் கார்த்திக்
|வங்காளதேச அணியை எந்த ஒரு பிரச்சனையும் இன்றி இந்தியா எளிதில் வீழ்த்தும் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
சென்னை,
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது.
அண்மையில் பாகிஸ்தான் சென்ற வங்காளதேச அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்திருந்தது. இதன் காரணமாக இந்திய அணிக்கு எதிராகவும் வங்காளதேச அணி சவால் அளிக்கும் வகையில் விளையாடும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வங்காளதேச அணியை எந்த ஒரு பிரச்சனையும் இன்றி இந்தியா எளிதில் வீழ்த்தும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வெற்றி பெறுவது என்பது எந்த அணிக்குமே சவாலான ஒன்றுதான். பாகிஸ்தானில் வங்காளதேச அணி சிறப்பாகத்தான் விளையாடியது. ஆனால் இந்தியாவை இந்திய மண்ணில் வீழ்த்துவது அவ்வளவு எளிது கிடையாது. இந்திய அணி எளிதில் வங்காளதேச அணியை தோற்கடிக்கும் என்று நான் நினைக்கிறேன். அதே போன்று இந்த தொடர் முழுவதுமே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை தயார் செய்வார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராகும் வகையில் அது போன்ற ஆடுகளங்கள் அமைக்கப்படும் என்று நான் நினைக்கிறேன்" என கூறினார்.