இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரக்கூடாது - பாக்.முன்னாள் வீரர் அதிரடி
|ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
லாகூர்,
2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 8 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. ஆனால் இந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இரு நாட்டு அணிகளும் ஆசிய மற்றும் ஐ.சி.சி தொடர்களில் மட்டுமே நேருக்கு நேர் மோதி வருகின்றன.
மேலும் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றது. ஆனால் அப்போது பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத இந்தியா தங்களது போட்டிகளை இலங்கையில் விளையாடி சாம்பியன் பட்டம் வென்றது. அதேபோல 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை துபாய் அல்லது இலங்கைக்கு மாற்றுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) பி.சி.சி.ஐ கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது குறித்து ஐ.சி.சி இன்னும் முடிவு செய்யவில்லை.
மறுபுறம் இந்தியா வரவில்லை என்றால் அவர்களைப் புறக்கணித்து விட்டு மற்ற அணிகளை வைத்து சாம்பியன்ஸ் டிராபியை தங்களது நாட்டிலேயே நடத்த பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது.
ஆனால் அரசியலையும் விளையாட்டையும் ஒன்றாக கலக்காமல் தங்கள் நாட்டுக்கு வந்து விளையாடுமாறு இந்தியாவிற்கு தொடர்ந்து பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரக்கூடாது என அந்த அணியின் முன்னாள் வீரர் கனேரியா கேட்டுக் கொண்டுள்ளார். ஏனெனில் பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாக அவர் அதிரடியான கருத்தை கூறியுள்ளார். ஒருவேளை இந்தியா வந்தால் அதை வைத்து பணத்தை சம்பாதிக்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு பிரச்சினையை சரி செய்வதை மறந்து விடும் என்று கனேரியா தெரிவித்துள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "பாகிஸ்தானில் தற்போதைய நிலைமையை பார்க்கும்போது இந்தியா அங்கு செல்லக்கூடாது என்றே நான் சொல்வேன். பாகிஸ்தான் தங்களது நிலைமையை பற்றி சிந்திக்க வேண்டும். ஐசிசி இது பற்றி முடிவு எடுக்க வேண்டும். பெரும்பாலும் இந்தியா துபாயில் விளையாடுவதற்கே வாய்ப்புள்ளது. ஒருவேளை இந்தியா வந்தால் இங்குள்ள ஊடகங்கள், வீடியோக்கள் போன்ற அனைத்தும் லைக்குகளை பெறும். இங்குள்ள பொருட்களும் விற்கப்படும். வீரர்களின் பாதுகாப்புதான் முக்கியம். மரியாதை இரண்டாவது விஷயம்.
தற்சமயத்தில் பிசிசிஐ சிறந்த வேலையை செய்து வருகிறது. அவர்களின் இறுதி முடிவை அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொள்ளும் என்று நினைக்கிறேன். இந்திய கிரிக்கெட் அணி வந்தால் பாகிஸ்தானுக்கு ஸ்பான்சர்ஷிப், ஊடகங்கள் வளர்ச்சி, பணம் போன்றவை பெருகும். ஆனால் தற்போது நீங்கள் முன்னேற்ற முயற்சிக்கும் மற்ற பகுதியையும் பார்க்க வேண்டும். இந்தியாவுக்கு நாங்கள் சென்றபோது அங்கே அனைத்தும் சிறப்பாக இருந்தது. உலகம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் வந்தனர். அங்குள்ள அரசு நல்ல வேலை செய்கிறது. இதுவே நிதர்சனமாகும்" என்று கூறினார்.