< Back
கிரிக்கெட்
இந்திய அணி அபாரம்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 352 ரன்கள் வெற்றி இலக்கு
கிரிக்கெட்

இந்திய அணி அபாரம்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 352 ரன்கள் வெற்றி இலக்கு

தினத்தந்தி
|
1 Aug 2023 10:59 PM IST

இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 352 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தரோபா,

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. இதில் தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை 114 ரன்னில் சுருட்டி வெற்றி கண்ட இந்திய அணி 2-வது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டி இருந்தது.

இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று துவங்கியது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணியின் சார்பில் முதலாவதாக இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். சிறப்பான தொடக்கம் தந்த இந்த ஜோடியால் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது.

அதிரடியாக ஆடிய இந்த ஜோடியில் இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தங்களது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினர். தொடர்ந்து ரன்களை குவித்து வந்த இந்த ஜோடியில் இஷான் கிஷன் 77 (64) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 8 (14) ரன்களில் கேட்ச் ஆனார்.

அடுத்ததாக சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் அதிரடியாக ரன்கள் குவிக்கத் தொடங்கினார். அவர் 4 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ரன்கள் குவித்துக்கொண்டிருந்த சுப்மன் கில்லும் 85 (92) ரன்களில் வெளியேறினார்.

அடுத்தாக கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். வேகமாக ரன்கள் குவித்த இந்த ஜோடியில் சூர்ய குமார் யாதவ் 35 (29) ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து ஹர்திக் பாண்ட்யாவுடன், ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் ஹர்திக் பாண்ட்யா தனது அரை சதத்தை பதிவு செய்தார்.

இறுதியில் அதிரடியாக ரன்கள் குவித்த ஹர்திக் பாண்ட்யா 70 (52) ரன்களும், ஜடேஜா 8 (7) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பின்னர் இந்திய அணி 50 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷேப்பர்டு 2 விக்கெட்டுகளும், ஜோசப், மோய்டி மற்றும் காரியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்க உள்ளது.

மேலும் செய்திகள்