< Back
கிரிக்கெட்
பாண்ட்யாவுக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் லட்சுமண் புகழாரம்

கோப்புப்படம்

கிரிக்கெட்

பாண்ட்யாவுக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் லட்சுமண் புகழாரம்

தினத்தந்தி
|
17 Nov 2022 10:28 PM GMT

இந்திய கிரிக்கெட் அணியின் பொறுப்பு கேப்டன் பாண்ட்யாவுக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் லட்சுமண் புகழாரம் சூட்டியுள்ளார்.

வெலிங்டன்,

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு தொடங்கி நடக்கிறது.

இதனிடையே நியூசிலாந்து தொடருக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படும் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'ஹர்திக் பாண்ட்யா அற்புதமான ஒரு தலைவர். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்திய முதலாவது ஆண்டிலேயே கோப்பையை வென்று சாதித்ததற்காக மட்டும் இதை கூறவில்லை. அயர்லாந்து தொடரில் இருந்து அவரிடம் நிறைய நேரம் செலவிட்டுள்ளேன். அவரது யுக்திகள் சிறப்பாக உள்ளன. அது மட்டுமின்றி களத்தில் பதற்றமின்றி அமைதியாக செயல்படுகிறார். சர்வதேச போட்டிகளில் விளையாடும் போது நெருக்கடியான சூழலில் இது போன்று பொறுமையுடன் செயல்படுவது மிகவும் முக்கியமானது. வீரர்களின் ஓய்வறையில் அவர் நடந்து கொள்ளும் விதமும் அருமை. ஹர்திக் பாண்ட்யா வீரர்களுக்கான கேப்டன். வீரர்கள் அவரை எளிதில் அணுகி பேசுவதுடன் தங்களது எண்ணங்களை வெளிப்படையாக சொல்கிறார்கள்' என்றார்.

மேலும் லட்சுமணன் கூறுகையில், 'சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அணியை முன்னெடுத்து செல்ல அந்த வடிவிலான போட்டிக்குரிய சிறப்பு வாய்ந்த வீரர்கள் தேவையாகும். 20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தவரை பன்முகத் திறமை கொண்ட வீரர்கள் அவசியமாகும். அதாவது பேட்ஸ்மேன்கள் பந்து வீச வேண்டும். பவுலர்கள் பேட்டிங் செய்யக்கூடியவராக இருக்க வேண்டும். பவுலர்கள் ஓரளவு பேட்டிங் செய்யும் போது முன்வரிசை வீரர்கள் இன்னும் சுதந்திரமாக விளையாட முடியும்' என்றார்.

மேலும் செய்திகள்