உலகக்கோப்பை தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் முகமது ஷமி...!
|இலங்கைக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இந்திய வீரர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மும்பை,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வரும் 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா - இலங்கை அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்தியா 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது. இதில் அதிரடியாக விளையாடிய சுப்மன் கில், விராட்கோலி இருவரும் சதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 92 ரன்களில் சுப்மன் கில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து விராட் கோலியும் 88 ரன்களில் அவுட்டானார்.
இதையடுத்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை பேட்ஸ்மேன்கள் திணறினர். இதனால் 55 ரன்கள் எடுத்திருந்த இலங்கை அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. இந்திய அணி சார்பில் முஹமது ஷமி 5 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா 1 விக்கெட்டையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த போட்டியில் முகமது சமி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம் அவர் ஒரு புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதில் உலகக்கோப்பை தொடர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனைதான் அது. இந்த சாதனையை அவர் வெறும் 14 இன்னிங்ஸில் எடுத்துள்ளார். இதற்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஜாஹிர் கான் மற்றும் ஸ்ரீநாத் முறையே 23 மற்றும் 33 இன்னிங்ஸில் 44 விக்கெட்டுகளை எடுத்திருந்தனர். இதனை தற்போது முகமது ஷமி முறியடித்துள்ளார்.