கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீராங்கனை மந்தனா 2-வது இடத்துக்கு முன்னேற்றம்
|ஒருநாள் போட்டி பேட்டர்ஸ் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலி முதலிடத்தில் தொடருகிறார்.
துபாய்,
சர்வதேச பெண்கள் 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டியின் அடிப்படையில் வீராங்கனைகளின் புதிய தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.
இதன்படி 20 ஓவர் போட்டியின் பேட்டர்ஸ் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி (743 புள்ளிகள்) முதலிடத்தில் உள்ளார். இந்திய வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா (731 புள்ளி) இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் 111 ரன்கள் சேர்த்தன் மூலம் இரு இடம் முன்னேறி தனது சிறந்த தரநிலையாக 2-வது இடத்தை பிடித்து இருப்பதுடன் முதலிடத்தையும் நெருங்கி இருக்கிறார். ஆஸ்திரேலிய வீராங்கனை மெக் லானிங் (725 புள்ளி) 3-வது இடத்துக்கும், நியூசிலாந்தின் சோபி டேவின் (715 புள்ளி) 4-வது இடத்துக்கும் சரிந்துள்ளனர்.
ஒருநாள் போட்டி பேட்டர்ஸ் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலி முதலிடத்தில் தொடருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 91 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவிய இந்திய வீராங்கனை மந்தனா 3 இடம் உயர்ந்து 7-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 4 இடம் அதிகரித்து 9-வது இடத்தை அடைந்துள்ளார்.