இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராக இந்திய கிரிக்கெட் வீரர் நியமனம்!
|இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இந்தியா ஏ அணிகள் மோதும் 4 பயிற்சி போட்டிகள் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளன.
மும்பை,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இந்தியா ஏ அணிகள் மோதும் 4 பயிற்சி போட்டிகள் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளன. இந்திய மண்ணில் விளையாடுவதற்கு தேவையான பயிற்சிகளை எடுக்கும் வகையில் நடைபெறும் இந்த போட்டியில் சில முக்கிய இங்கிலாந்து வீரர்கள் விளையாட உள்ளனர்.
இந்நிலையில் இந்தியா ஏ அணிக்கு எதிராக நடைபெறும் இந்த பயிற்சி போட்டிகளில் இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் செயல்படுவார் என்று அந்நாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இருக்கும் மைதானங்களைப் பற்றிய சூழ்நிலைகளை இங்கிலாந்து வீரர்கள் தெரிந்து கொள்வதற்காக தினேஷ் கார்த்திக் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணியின் இயக்குனர் மோ போபாட் கூறியுள்ளார்.
ஜனவரி 12-ம் தேதி முதல் பிப்ரவரி 4-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் தினேஷ் கார்த்திக் ஜனவரி 18-ம் தேதி வரை மட்டுமே ஆலோசகராக செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.