டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை சென்றடைந்த இந்திய கிரிக்கெட் அணி
|இந்தியா - இலங்கை தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது.
கொழும்பு,
இந்திய கிரிக்கெட் அணி விரைவில் இலங்கைக்கு சென்று அந்த நாட்டு அணிக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. 20 ஓவர் ஆட்டங்கள் வருகிற 27, 28, 30-ம் தேதிகளில் பல்லகலேவிலும், ஒரு நாள் போட்டிகள் ஆகஸ்டு 2, 4, 7-ம் தேதிகளில் கொழும்புவிலும் நடைபெறுகிறது.
இந்த தொடருக்கான இந்திய டி20 அணி சூர்யகுமார் யாதவ் தலைமையிலும், ஒருநாள் அணி ரோகித் சர்மா தலைமையிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கவுதம் கம்பீரின் பயணம் இந்த தொடருடன்தான் தொடங்க உள்ளது. இதனால் இந்த தொடர் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்பதற்காக மும்பையிலிருந்து புறப்பட்ட இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சென்றடைந்துள்ளது.