< Back
கிரிக்கெட்
எனது ரன்-அவுட் சிறுபிள்ளைத்தனமானது அல்ல விமர்சனங்களுக்கு இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பதில்
கிரிக்கெட்

'எனது ரன்-அவுட் சிறுபிள்ளைத்தனமானது அல்ல' விமர்சனங்களுக்கு இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பதில்

தினத்தந்தி
|
25 Feb 2023 2:34 AM IST

ஹர்மன்பிரீத் கவுர் ரன்-அவுட் ஆன விதம் சிறுபிள்ளைத்தனமானது என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் சாடியிருந்தார்.

கேப்டவுன்,

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் கேப்டவுனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது அரைஇறுதியில் இந்திய அணி வெற்றியை நெருங்கி வந்து 5 ரன் வித்தியாசத்தில் கோட்டை விட்டது. இதில் 173 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் (52 ரன், 34 பந்து, 6 பவுண்டரி, ஒருசிக்சர்) அற்புதமான பேட்டிங்கால் வெற்றியை நோக்கி பயணித்தது.

ஆனால் தேவையில்லாமல் 2-வது ரன்னுக்கு ஓடிய போது, ஹர்மன்பிரீத் ரன்-அவுட் ஆகிப்போனார். அதுவும் கிரீசை எட்டும் தூரத்திற்கு வந்து தடுமாறிய அவர் பேட்டை சறுக்கியபடி நீட்டியிருந்தால் தப்பியிருப்பார். அவரது ரன்-அவுட் தான் ஆட்டத்தின் போக்கை புரட்டிப்போட்டது. அதன் பிறகு மேலும் சில விக்கெட்டுகள் சரிய ஆட்டம் ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியது.

இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 167 ரன்களில் அடங்கிப்போனது. ஹர்மன்பிரீத் கவுர் ரன்-அவுட் ஆன விதம் சிறுபிள்ளைத்தனமானது என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் சாடியிருந்தார். இது குறித்து இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நிருபர்களிடம் கூறுகையில் 'எனது ரன்-அவுட் குறித்து நாசர் ஹூசைனின் விமர்சனம் குறித்து கேட்கிறீர்கள்.

அவருக்கு அந்த மாதிரி தோன்றியிருக்கலாம். ஆனால் கிரிக்கெட்டில் இது போன்ற ரன்-அவுட்டுகள் நிகழ்ந்துள்ளது. ரன் எடுக்க வேகமாக ஓடுகையில், கிரீசுக்கு அருகில் வந்து பேட்டை குத்தும் போது அது நகராமல் ஒரு கனம் அப்படியே நின்று விடுவதை பல முறை பார்த்து இருக்கிறேன். இப்போது எனக்கும் இது போல் நடந்தது துரதிர்ஷ்டவசமானது.

மற்றபடி இது கிரிக்கெட்டில் சிறார்கள் இழைக்கும் தவறுகள் போல் கிடையாது. ஏனெனில் நாங்கள் முதிர்ச்சியானவர்கள். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுகிறோம். பேட் சிக்காமல் இருந்திருந்தால் 2-வது ரன்னை நிறைவு செய்திருப்பேன். நான் கடைசி வரை களத்தில் நின்றிருந்தால் நிச்சயம் ஒரு ஓவருக்கு முன்பாகவே இலக்கை எட்டியிருக்கலாம்.

எனது உணர்வுகளை கட்டுப்படுத்துவது கடினம். தோல்வியின் வேதனையால் தவிக்கிறேன். இந்த ரணமும், ஏமாற்றமும் இன்னும் எத்தனை நாட்கள் உலுக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம், கடைசி பந்து வரை போராடினோம் என்பதை மட்டும் சொல்லிக் கொள்ள முடியும். தொடரில் நாங்கள் விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.

மேலும் செய்திகள்