இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இரட்டை சாதனை...!
|10 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.
கெபேஹா,
10 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் கெபேஹா நகரில் நேற்று நடந்த 'பி' பிரிவு லீக் ஆட்டத்தில் இந்திய அணி, அயர்லாந்தை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி மந்தனாவின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது.
இந்திய அணி தரப்பில் மந்தனா 87 ரன்னும், ஷபாலி 24 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய அயர்லாந்து அணியில் எமி ஹன்டர்(1 ரன்) ரன்-அவுட் ஆனார். பிரேன்டர்ஹாஸ்ட் (0) ரேணுகா சிங்கின் பந்து வீச்சில் வீழ்ந்தார்.
இதன் பின்னர் கபி லீவிஸ், கேப்டன் லாரா டெலானி கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். 8.2 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்திருந்த போது பலத்த காற்றுடன் மழை குறுக்கிட்டது. அப்போது லீவிஸ் 32 ரன்னுடனும், டெலானி 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
தொடர்ந்து மழை பெய்ததால் மேற்கொண்டு ஆட்டத்தை தொடர முடியவில்லை. இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் விதிமுறை கடைபிடிக்கப்பட்டது. 8.2 ஓவர்களில் அயர்லாந்தின் வெற்றிக்கு 59 ரன்கள் தேவையாக இருந்தது. ஆனால் 54 ரன் மட்டுமே எடுத்திருந்ததால் இந்தியா 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4-வது லீக்கில் ஆடி 3-வது வெற்றியை சுவைத்த இந்திய அணி 6 புள்ளியுடன் அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. இந்த ஆட்டத்தில் ஆடியதன் மூலம் அவர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது அவருக்கு இந்த ஆட்டம் 150-வது ஆட்டமாகும். இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 150 ஆட்டங்களில் விளையாடிய முதல் நபர் என்ற பெருமையை பெற்றார். ஆண்கள் கிரிக்கெட்டில் கூட யாரும் இந்த மைல்கல்லை எட்டியது கிடையாது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 13 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அவர் 3 ஆயிரம் ரன்களையும் (3,006 ரன்) கடந்தார். நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் (3,820 ரன், 143 ஆட்டம்), ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் (3,346 ரன்), வெஸ்ட் இண்டீசின் ஸ்டெபானி டெய்லர் (3,166 ரன்) ஆகியோருக்கு அடுத்து 20 ஓவர் கிரிக்கெட்டில் 3 ஆயிரம் ரன்களை கடந்த 4-வது வீராங்கனையாக சாதனை பட்டியலில் ஹர்மன்பிரீத் இணைந்தார்.